உலக நாடுகளை அச்சுறுத்திவரும் கரோனா வைரஸால் பிறந்த குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இத்தொற்றால் வயதானவர்கள் உயிரிழக்கும் எண்ணிக்கை ஒருபக்கம் அதிகரித்தாலும், மறுபக்கம் கரோனாவிலிருந்து குணமடையும் வயதானவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
தற்போது, ஆந்திராவில் ஒரு மூதாட்டி கரோனா தொற்றிலிருந்து மீண்டுள்ளார். கடந்த ஏப்ரல் 5ஆம் தேதி அனந்தபூர் மாவட்டத்தைச் சேர்ந்த 85 வயது மூதாட்டி, அவரது பேரன் உட்பட ஐந்து பேருக்கு கரோனா இருப்பது உறுதியானதையடுத்து, சிகிச்சைக்காக அவர்கள் கிம்ஸ் சவீரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், சிகிச்சை பெற்றுவந்த மூதாட்டி உட்பட ஐந்து பேரும் நேற்று இரவு இத்தொற்றிலிருந்து முழுவதுமாக குணமடைந்துள்ளனர். இது குறித்து மருத்துவர் ஒருவர் கூறுகையில், “முதலில் அந்த மூதாட்டி சிகிச்சையெடுத்துக்கொள்ள மறுத்தார். பின் மருத்துவர்களின் தொடர் அறிவுறுத்தலால் அவர் சிகிச்சைக்கு நன்கு ஒத்துழைத்தார்.
அவர்களுக்கான 16 நாள் சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தபிறகு, அரசு நெறிமுறைகளின்படி இரண்டு முறை கரோனா பரிசதோனை செய்யப்பட்டது. இரண்டு முறையும் அவர்களுக்கு கரோனா தொற்று இல்லை என்பது தெரியவந்ததால், அவர்கள் நேற்று இரவு வீட்டிற்கு அனுப்பப்பட்டனர் ” என்றார்.
இதைத்தொடர்ந்து கரோனாவிலிருந்து குணமடைந்த ஐவரும் ஆம்புலன்ஸ் மூலம் வீட்டிற்குச் சென்றனர். அதற்கு முன்னதாக மருத்துவமனை முன்பு அவர்கள் இப்பெருந்தொற்றிலிருந்து குணமடைந்ததை வெளிப்படுத்தும் விதமாக வெற்றிச் சின்னத்துடன் புகைப்படத்திற்கு போஸ் தந்தனர். குறிப்பாக, கரோனாவை வென்ற 85 வயது மூதாட்டியை மருத்துவப் பணியாளர்கள், சுகாதார ஊழியர்கள் அனைவரும் கைகளைத் தட்டி வழியனுப்பி வைத்தனர். கரோனாவால் உயிரிழந்த அவரது மகன் மூலம் மூதாட்டிக்கும் அவரது பேரனுக்கும் கரோனா பரவியது.
இவர்கள் ஐந்து பேரும் குணமடைந்தன்மூலம், அனந்தப்பூரில் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 7ஆக அதிகரித்துள்ளது. அம்மாவட்டத்தில் இதுவரை 36 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் மூன்று பேர் உயிரிழந்த நிலையில், 26 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: கரோனாவை வென்ற 74 வயது மூதாட்டி; மருத்துவர்களுக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி