நாட்டில் கரோனா வைரஸ் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்த வண்ணம் உள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 78 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இருப்பினும், கரோனாவால் அதிகமாக உயிரிழந்தோர் வயதானவர்கள் தான். அதனால், அவர்களுக்கு சிகிச்சை அளித்து காப்பாற்றுவது மருத்துவர்களுக்கு சவாலாக தான் உள்ளது. அந்த வகையில், கரோனா வைரஸ் பாதித்த 85 வயதான மூதாட்டி குணமடைந்து வீடு திரும்பியுள்ள நம்பிக்கைக்கீற்றான சம்பவம், ஒடிசாவில் நடைபெற்றுள்ளது.
ஒடிசா மாநிலத்தில் இயங்கும் SUM மருத்துவமனையில் 85 வயதான மூதாட்டி ஒருவர், கரோனா அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டுள்ளார். பரிசோதனை முடிவில் கரோனா தொற்று உறுதியானதால் தனிமைப்படுத்தி சிகிச்சையளிக்கப்பட்டது. சுமார் 12 நாள்கள் தீவிர சிகிச்சையின் பலனாக, 22 கிலோ மட்டுமே எடையுள்ள மூதாட்டி குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.
இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், "மருத்துவர்கள், செவிலியர், சுகாதாரப் பணியாளர்கள் ஆகியோரின் சரியான கவனிப்பால் தான் மூதாட்டி குணமடைந்துள்ளார். இச்சம்பவம் மற்ற கரோனா நோயாளிகளின் மனதில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. அவருடன் சேர்ந்து 3 வயது சிறுவர்கள் உட்பட ஜெய்ப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 14 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். எங்களது மருத்துவமனையில் கரோனா சிகிச்சை அளிப்பதற்கு பிரத்யேக வளாகம் அமைத்துள்ளோம்.
கரோனா அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்கும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது. தினந்தோறும் ஆறு மணி நேரத்திற்கு ஒரு முறை மருத்துவமனை வளாகம், தரைகள், படுக்கைகள் ஆகியவை சானிடைசர் கொண்டு சுத்தம் செய்யப்படுகிறது" எனக் குறிப்பிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: கரோனா வைரஸ்: இயல்பாகிப் போன புதிய சூழல்...