மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் உத்தரப் பிரதேசத்தில் வேலை செய்துவந்தனர். இந்நிலையில் கரோனா பொதுஅடைப்பு காரணமாக, இவர்களின் வாழ்வு, வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இவர்கள், சொந்த மாநிலம் திரும்ப முடிவெடுத்தனர்.
அதன்படி உத்தரப் பிரதேசத்தில் இருந்து வாகனத்தில் மகாராஷ்டிரா நோக்கி சென்றனர். அந்த வாகனம், மத்தியப் பிரதேச மாநிலம் குணா மாவட்டத்தின் கேன்ட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வியாழக்கிழமை (மே14) அதிகாலை 3 மணியளவில் வந்தது.
அப்போது எதிரே இருந்து வந்த பேருந்து, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பயணித்த வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில் வாகனத்தில் பயணம் செய்த எட்டு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உயிர் இழந்தனர். 54 தொழிலாளர்கள் காயமுற்றனர். விபத்தில் காயமுற்ற தொழிலாளர்களுக்கு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
இது தொடர்பாக காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
கரோனா பொதுஅடைப்பு காரணமாக பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரம் ஆகிய இரண்டையும் இழந்து வருகின்றனர். இதனால் அவர்கள் வேறு வழியின்றி சொந்த மாநிலத்துக்கு திரும்பிவருகின்றனர். ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் தூரத்தை சைக்கிளிலும், நடந்தும் செல்கின்றனர். இதுபோன்ற ஆபத்தான பயணங்கள் நாட்டின் எங்கோ ஒரு மூலையில் தொடர்ந்து நடந்து கொண்டேதான் இருக்கிறது.