75 விழுக்காடு வங்காள மாணவர்கள் ஜேஇஇ தேர்வில் கலந்துகொள்ளவில்லை - மம்தா - ஜேஇஇ தேர்வு
கொலகத்தா: பெருந்தொற்று காரணமாக நுழைவுத்தேர்வுகளை நடத்த மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா எதிர்ப்பு தெரிவித்த நிலையில், 75 விழுக்காடு வங்காள மாணவர்கள் ஜேஇஇ தேர்வில் கலந்துகொள்ளவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
கரோனா பெருந்தொற்று காரணமாக ஜேஇஇ, நீட் நுழைவுத்தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கோரிக்கை விடுத்துவந்தார். இருப்பினும், நாடும் முழுவதும் 660 தேர்வு மையங்கள் மூலம் ஜேஇஇ நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டது.
செப்டம்பர் 1ஆம் தேதி நடைபெற்ற தேர்வில் 75 விழுக்காடு வங்காள மாணவர்கள் கலந்துகொள்ளவில்லை எனவும் அதற்கு காரணம் மத்திய அரசின் ஆணவப்போக்கு எனவும் மம்தா குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "மற்ற மாநிலங்களில்கூட, கரோனா சூழல் காரணமாக 50 விழுக்காடு மாணவர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். தேர்வில் கலந்துகொள்ளாத மாணவர்கள் குறித்து மத்திய அரசு எண்ணி பார்க்க வேண்டும். நமது மாணவர்கள் பெரும் சிக்கலில் சிக்கியுள்ளனர்.
ஜேஇஇ தேர்வினை பலரால் எழுத முடியவில்லை. எனவே, நுழைத் தேர்வுகளுக்கு அனுமதி அளித்த உச்ச நீதிமன்ற உத்தரவை மறு சீராய்வு செய்ய மத்திய அரசு முன்வர வேண்டும் என கோரிக்கை விடுத்தோம். தேர்வுகளை நடத்தும் நோக்கில் மாநில அரசு பல முயற்சிகள் செய்த போதிலும் 4,652 மாணவர்களில் 1,167 மாணவர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
இதன்மூலம், 25 மாணவர்கள் மட்டுமே தேர்வினை எழுதியது தெரியவந்துள்ளது. மத்திய அரசின் வழிகாட்டுதல்படி ஏற்பாடுகள் செய்யப்பட்டன. கரோனா காரணமாக தேர்வினை எழுதாத மாணவர்களுக்காக யார் பொறுப்பேற்க போகிறார்கள்? சில நாள்களுக்கு தேர்வினை ஒத்திவைத்திருந்தால், என்ன தவறு நடைபெற்றிருக்கும்? இதில் ஏன் ஆணவ போக்கை வெளிப்படுத்த வேண்டும்? மத்திய அரசின் பிடிவாத போக்குக்கு காரணம் என்ன? மாணவர்களின் எதிர்காலத்தை சிதைக்க உங்களுக்கு யார் உரிமை அளித்தது?" என்றார்.
இதையும் படிங்க: 40 ஆண்டுகளில் இல்லாத பொருளாதார சீரழிவு - மத்திய அரசை சாடும் ராகுல்