1947-ல் இந்திய அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்களில் இன்றைக்கும் வாழ்ந்து கொண்டிருப்பவர் டி.எம்.காளியண்ண கவுண்டர்.
காளியண்ண கவுண்டர்
சேலம் மாவட்டம் அக்கரைப்பட்டி கிராமத்தில் முத்து நல்லி கவுண்டர் - பாப்பாயம்மாள் தம்பதிக்கு 10-01-1921 ம் ஆண்டு மகனாகப் பிறந்தவர் காளியண்ண கவுண்டர்.
முத்து நல்லி கவுண்டர் தனது குடும்பத்துடன் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டிற்கு இடம்பெயர்ந்தார். திருச்செங்கோடு அரசு உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்த காளியண்ண கவுண்டர் சென்னை லயோலா கல்லூரியில் பி.ஏ. பட்டப் படிப்பில் சேர்ந்தார்.
இளமைக் காலம்
எம்.ஏ முதலாண்டு படிக்கும் போது நாட்டு விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றார். அதன் காரணமாக தனது படிப்பைத் தொடர கல்லூரி நிர்வாகம் அனுமதிக்கவில்லை. அதன் பின் பச்சையப்பன் கல்லூரியில் சேர்ந்து எம்.ஏ பட்டம் பெற்றார்.
டி.எம். காளியண்ண கவுண்டர், தனது 27-வது வயதில் இந்திய அரசியல் நிர்ணய சபை உறுப்பினராக நியமிக்கபட்டார். 1947-ல் இந்திய அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்களில் இன்றைக்கும் வாழ்ந்து கொண்டிருப்பவர் இவர் ஒருவரே!
தலைவர்களுடன் நெருக்கம்
இவர் சட்ட மாமேதை அம்பேத்கர், அண்ணல் மகாத்மா காந்தி, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், ராஜாஜி மற்றும் கர்ம வீரர் காமராஜர் உள்ளிட்ட தலைவர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.
ஜனநாயகவாதி
தற்போது 99 வயதாகும் டி.எம். காளியண்ண கவுண்டர் காங்கிரஸில் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். இவர், தற்போது வயது முதிர்வின் காரணமாக ஓய்வெடுத்து வருகிறார். ஒவ்வொரு சட்டப்பேரவை, மக்களவைத் தேர்தல்களிலும் தவறாது தனது வாக்கினை பதிவு செய்து விடுவார்.
இந்நிலையில் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் 70ம் ஆண்டு நிறைவு நாள் விழாவில் இந்திய அரசியல் நிர்ணயசபை உறுப்பினர் டி.எம். காளியண்ண கவுண்டரின் வரலாறை எடுத்துரைக்க வேண்டும் என குடியரசு துணை தலைவர் வெங்கய்யா நாயுடுவிடம் தமிழக எம்.பிக்கள் ஏ.கே.பி சின்ராஜ் மற்றும் கணேசமூர்த்தி ஆகியோர் கோரிக்கை மனு அளித்தனர்.
பிரத்யேக பேட்டி
இதுகுறித்து முதும்பெரும் தலைவர் டி.எம்.காளியண்ண கவுண்டர் ஈடிவி பாரத்திற்கு அளித்த பிரத்யேக பேட்டியில் "இந்திய அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினராக இருந்த போது சட்ட மாமேதை அம்பேத்கருடன் இணைந்து பணியாற்றிய அனுபவங்களை பகிர்ந்தார்.
அதேபோல் ராஜாஜி, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உள்ளிட்டோர்களிடம் பணியாற்றிய அனுபவங்களை பகிர்ந்தார். மேலும் மத்திய அரசு இந்திய அரசியலமைப்பு சட்டம் இயற்றப்பட்டதிலிருந்து மாற்றம் ஏற்படவில்லை எனவும் தெரிவித்தார்.
ஜமீன்தார் முறைக்கு எதிர்ப்பு
அதன்பின் பேசிய டி.எம்.காளியண்ணகவுண்டரின் மகன் ராஜேஷ் " தனது தந்தையார் பல்வேறு தலைவர்களுக்கு நெருக்கமானவர். குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சராக இருந்த சஞ்சீவய்யாவுடன் நெருக்கமாக செயல்பட்டார்.
மிகப்பெரிய ஜமீன்தார் குடும்பத்தைச் சேர்ந்த டி.எம்.காளியண்ண கவுண்டர் சட்டசபையில் ஜமீன் ஒழிப்பு முறைக்கு ஆதரவாக வாக்களித்து வெற்றிபெறச் செய்தார். இன்று வரை திருமணிமுத்தாறு திட்டத்தை நிறைவேற்ற பாடுப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க : 'அம்பேத்கர் நம்மைக் கண்டு பெருமை கொண்டிருப்பார்' - நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை