தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த ஆறு நபர்கள் கடந்த 13ஆம் தேதி தலைநகர் டெல்லி நிசாமுதீன் பகுதியில் நடைபெற்ற மத நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றனர். 15ஆம் தேதிவரை அங்கு தங்கியிருந்த அவர்கள் மீண்டும் தெலங்கானா திரும்பியபோது அவர்களுக்கு கரோனா பாதிப்பு இருந்தது தெரியவந்துள்ளது.
இதையடுத்து ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனைகளில் தங்க வைக்கப்பட்டு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனையில், அவர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அந்த ஆறு பேரும் உயிரிழந்ததாக அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தெரிவித்தார்.
உயிரிழந்த ஆறு பேருடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் உடனடியாக தங்களது விவரங்களை அரசுக்கு தெரிவித்து சோதனைக்கு உட்பட வேண்டும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் அந்த மத நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களும் தாங்களே முன்வந்த அரசிடம் தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தெலங்கானாவில் தற்போது கரோனாவால் 69 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஒருவர் குணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே வரும் ஏப்ரல் 7ஆம் தேதிக்குள் தெலங்கானாவை கரோனா அற்ற மாநிலமாக அறிவிக்கப்போவதாக அம்மாநில முதலமைச்சர் நேற்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஒரேநாளில் 227 பேருக்கு கரோனா: பலி எண்ணிக்கை 32ஆக அதிகரிப்பு!