டெல்லி ஜகிர் நகரிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் நேற்று நள்ளிரவில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த தீயணைப்புத் துறையினர் பலமணி நேர போராட்டத்திற்கு பின்பு நவீன ரக கருவிகளைக் கொண்டு தீயை அணைத்தனர். இதில், அடுக்குமாடிக் குடியிருப்பிலிருந்த ஆறு பேர் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும், 20 பேர் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு ‘ஹோலி பேமிலி மருத்துவமனை’யில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
இது குறித்து ஹோலி பேமிலி மருத்துவமனையின் தலைமை மருத்துவர், தீ விபத்தில் சிக்கியவர்களில் ஐந்து பேர் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டுவருகிறது என்றார்.
நள்ளிரவில் திடீரென அடுக்குமாடிக் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து ஜகிர் நகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.