கர்நாடகா மாநிலம் பெங்களூருவிலுள்ள ஐஎம்ஏ என்ற நகைக்கடை மக்களுக்கு அதிக வட்டி தருவதாகக் கூறி வாடிக்கையாளர்களிடம் பணம் வசூலித்தது. இதனை நம்பி சுமார் 46 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் அந்த நகைக்கடையில் முதலீடு செய்தனர்.
பின்னர் ஐஎம்ஏ நிறுவனர் மன்சூர் கான் 1,600 கோடியுடன் தலைமறைவானார். இதனால், அதிர்ச்சியடைந்த நகைக் கடையில் முதலீடு செய்தவர்கள் காவல் துறையினரிடம் புகார் தெரிவித்தனர்.
நாட்டையே உலுக்கிய இச்சம்பவத்தில் மன்சூர் கானை கைது செய்யுமாறு கோரிக்கைகள் வலுத்தன. அதன்படி கடந்த மாதம் மன்சூர் கான் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், சிறப்புப் புலனாய்வுப் பிரிவு காவல் துறையினர் நடத்திய தீவிர விசாரணையில் மன்சூர் கான் தனது வீட்டு நீச்சல் குளத்திற்கு செல்லும் குழாய்க்கடியில் தங்க பிஸ்கட்டுகளை மறைத்து வைத்திருப்பதாகத் தெரிவித்தார்.
அதனடிப்படையில், சிறப்புப் புலனாய்வுத் துறை காவல் துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அதில், டன் கணக்கில் தங்க பிஸ்கட்டுகள் சிக்கியது.
இது குறித்து சிறப்பு புலனாய்வுத் துறை காவல் துறை அலுவலர் ஒருவர் கூறும்போது, ‘மன்சூர் கானிடம் நடத்திய தீவிர விசாரணையில் தங்க பிஸ்கட்டுகளை மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது. 5880 தங்க பிஸ்கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பறிமுதல் செய்யப்பட்ட தங்க பிஸ்கட்டுகள் உண்மையானவையா? அல்லது போலியானவையா? என்ற சோதனையும் நடத்தப்படவுள்ளது’ என்றார்.
மன்சூர் கான் வழக்கில் மீண்டும் ஒரு திருப்பமாக தங்க பிஸ்கட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ள சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.