கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஷைஜு தாமஸ், சமூக வலைதளம் மூலம் நேபாளி பெண்ணுடன் பழகி வந்துள்ளார். நாளடைவில் இருவருக்குமிடையே காதல் மலர்ந்ததால் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு குழந்தை ஒன்றும் பிறந்துள்ளது. மிகவும் நல்லபடியாக சென்று கொண்டிருந்த தாமஸின் வாழ்க்கையில் குடி என்ற போதை புயல் அடித்துள்ளது. குடியின் உச்சக்கட்டத்தால் தனது குழந்தையின் பிறப்பு குறித்து சந்தேகிக்க தொடங்கியுள்ளார். இதனால் வீட்டில் அவ்வப்போது சண்டை வருவது வழக்கம்.
இந்நிலையில், நேற்று வழக்கம் போல் குடி போதையில் வீட்டிற்கு வந்த தாமஸ், தனது மனைவியுடன் சண்டையிட தொடங்கியுள்ளார். ஒரு கட்டத்தில் மனைவி கையிலிருந்த பிறந்த 54 நாள்கள் மட்டுமே ஆகியுள்ள குழந்தையை பறித்து அடித்துள்ளார்.மேலும், குழந்தையை கட்டிலை நோக்கி தூக்கி வீசியுள்ளார்.
இதில், பலத்த காயமடைந்த குழந்தை அழ தொடங்கியுள்ளது. சத்தத்தைக் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினரும், குழந்தையின் தாயாரும் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். குழந்தையின் உடல்நிலை மோசமாகவுள்ளதால் ஐசியுவில் தீவிர சிகிச்சையளித்து வருகின்றனர்.
தகவலறிந்து வந்த காவல் துறையினர், குழந்தை கட்டிலிலிருந்து தவறி விழுந்ததாக கூறிய தந்தையின் சொல்லில் சந்தேகம் ஏற்பட்டதால் தீவிர விசாரணை நடத்தினர். மொழிபெயர்பாளர் உதவியுடன் குழந்தையின் தாயாரை விசாரித்ததில், பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தன.
தினந்தோறும் தாமஸ் குழந்தை மீதான வெறுப்பு காரணமாக குடித்துவிட்டு வரும்போது குழந்தையை துன்புறுத்தியதும், ஆத்திரத்தில் தூக்கி வீசியதும் தெரியவந்தது. இதையடுத்து, தாமஸ் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் கைது செய்தனர்.