அசிம் பிரேம்ஜி பல்கலைகழகம் இந்தியாவின் வேலைவாய்ப்பு குறித்து ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
பேராசிரியர் முனைவர் அமித் பசோலே இந்த ஆய்வறிக்கையை எழுதி வெளியிட்டுள்ளார். அதில், நாடு முழுவதும் உள்ள தொழில் மற்றும் வேலைவாய்ப்பு குறித்து ஒப்பீட்டு மதிப்பீடு கணக்கிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையின்படி, 2018 ஆம் ஆண்டில் நாட்டின் மொத்த வேலையின்மை 6 விழுக்காடு அளவிற்கு உயர்ந்துள்ளது. இந்தப் புள்ளிவிவரம் மூலம் கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் வேலையின்மை இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது.
மேலும் இந்தச் சரிவானது 2017ஆம் ஆண்டு தொடக்கத்திலிருந்து வேகமாக நடைபெற்றதாக ஆய்வு தெரிவிக்கிறது. இந்த வேலையிழப்பில் ஆண்களை விட பெண்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக நாட்டின் வேலைவாய்ப்பில் பெண்களின் பங்களிப்பு முன்பில்லாத அளவிற்கு சரிந்துள்ளது.
நகர்ப்புறங்களில் வசிக்கும் பட்டதாரி பெண்களில் சுமார் 34 விழுக்காட்டினர் வேலையில்லாமல் இருப்பதாக தகவல் வந்துள்ளது. குறிப்பாக 20-24 வயதிலான பெண்கள் அதிகளவில் வேலையில்லாமல் இருப்பதாக ஆய்வு தெரிவிக்கிறது.
அதே வேலையில் ஆண்களில் 13.5 விழுக்காட்டினர் வேலையில்லாமல் இருப்பது தெரியவந்துள்ளது. இதில் பெரும்பாலானோர் 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மத்திய அரசு மேற்கொண்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பாதிக்கப்பட்டது ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்காதவர்களை விட படித்தவர்கள் மத்தியில்தான் வேலையின்மைப் பிரச்னை அதிகம் காணப்படுவதாக ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.