உலக மக்களின் உயிருக்கு ஆட்கொல்லி வைரஸான கரோனா (கோவிட்19) தொற்றுநோய் மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்குகிறது. இந்த தொற்றுநோய்க்கு சீனா, அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின் மற்றும் ஈரான் உள்ளிட்ட நாடுகள் ஆயிரக்கணக்கான உயிர்களை இழந்துள்ளன.
இந்தியாவில் இதுவரை 1025 பேர் கோவிட்19 வைரஸ் தொற்று கிருமியால் பாதிக்கப்பட்டுள்ளனர். 26 பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் தொற்றுக்கு ஆளாகி சிகிச்சை மூலம் 89 பேர் குணமடைந்துள்ளனர். உலகில் பாதிப்புக்கு ஆறு லட்சத்து 64 ஆயிரத்து 731 பாதிக்கப்பட்டுள்ளனர். முப்பது ஆயிரத்து 892 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 427 பேர் குணமடைந்துள்ளனர்.
கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக உலக நாடுகள் சர்வதேச எல்லைகளை மூடியுள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளிலும் முழு அடைப்பு (லாக் டவுன்) நடைமுறையை பின்பற்றுகின்றன. இந்தியாவை பொறுத்தமட்டில் கடந்த 22ஆம் தேதி ஒருநாள் மக்கள் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது.
அதன் பின்னர் அந்த ஊரடங்கு மேலும் 21 நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுக்க 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இது அடுத்த மாதம் (ஏப்ரல்) 14ஆம் தேதி வரை அமலில் இருக்கும். பெரும்பாலான மக்கள் தங்களின் வீடுகளில் முடங்கியுள்ளனர். இந்நிலையில் 21 நாள்கள் ஊரடங்கு பயனளிக்காது என்று லண்டனை சேர்ந்த இந்திய வம்சாவளி ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். அவர்களின் கூற்றுப்படி குறைந்தது 49 நாள்கள் அடைப்பு (லாக் டவுன்) அவசியம்.
இது தொடர்பாக கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பயன்பாட்டு கணிதம் மற்றும் தத்துவார்த்த இயற்பியல் துறையைச் சேர்ந்த ராஜேஷ் சிங்குடன் இணைந்து ரோனோஜோய் ஆதிகாரி எழுதிய கட்டுரையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் இந்தியாவில் 49 நாள்கள் முழு பூட்டுதல் அவசியம் என்றும் 21 நாள்கள் மட்டும் முழு பூட்டுதலை கடைப்பிடிப்பதால் எவ்வித பயனும் இல்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த ஆராய்ச்சிக் கட்டுரையில் கோவிட்19 தொற்று சிறுவர் பெரியவர் என வித்தியாசமின்றி பரவுகிறது.
இந்த தொற்றுநோயை தடுக்க நம்மிடம் தடுப்பூசி உள்ளிட்ட எதுவும் இல்லை. சமூக இடைவெளி கடைப்பிடித்தல் மட்டுமே தற்போது அவசியம். ஏனெனில் சமூக தொடர்புகளின் கட்டமைப்புகள் நோய்த்தொற்றின் பரவலை தீர்மானிக்கிறது.
ஆகவே பெரிய அளவிலான சமூக தொலைதூர நடவடிக்கைகள் மூலம் இந்த கட்டமைப்புகளை கட்டுப்படுத்துவது மிகவும் பயனுள்ள வழிமுறையாக தோன்றுகிறது. எனவே மூன்று வார பூட்டுதல் கரோனா வைரஸ் எழுச்சியை தடுக்க போதுமானதாக இல்லை.
அதற்கு பதிலாக அவ்வப்போது தளர்வுடன் பூட்டுதல் வழிமுறைகள் அவசியம். எனினும் சமூக தொடர்பு அறிதல், தனிமைப்படுத்தல் மற்றும் சமூக இடைவெளி சாத்தியமானதாக இருக்க வேண்டும்.