உத்தரப் பிரதேசம், சத்தீஸ்கர், கேரளா, திரிபுரா ஆகிய நான்கு மாநிலங்களில் தலா ஒரு தொகுதி என நான்கு தொகுதிகளுக்கு கடந்த 23ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு அதன் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
அதன்படி, உத்தரப் பிரதேசம் மாநிலம் ஹமீர்பூர் சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட யுவராஜ் சிங் என்ற வேட்பாளர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட சமாஜ்வாதி கட்சியின் மனோஜ் பிரஜாபதி என்ற வேட்பாளரைவிட கிட்டத்தட்ட 17 ஆயிரத்து 800 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார்.
சத்தீஸ்கர் மாநிலத்தின் தந்தேவாடா சட்டப்பேரவைத் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட தேவ்தி கர்மா வெற்றிபெற்றார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ஓஜஸ் மாண்டவியைவிட 11 ஆயிரத்து 192 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிவாகை சூடியுள்ளார்.
திரிபுரா மாநிலத்தில் பாதர்காட் (தனி) தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ரத்தன் என்பவரை சுமார் ஐந்தாயிரத்து 200 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் மிமி மஜூம்தார் தோற்கடித்து வெற்றிபெற்றார்.
கேரளாவின் பாலா சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் ஆளும் இடது ஜனநாயக முன்னணி (LDF) கூட்டணி சார்பாக போட்டியிட்ட தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் மாணி சி. காப்பன், காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் ஜோஸ் டாம் புலிகுன்னலை விட இரண்டாயிரத்து 943 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றுள்ளார்.
அந்த வகையில், நேற்று வெளியான நான்கு தொகுதி இடைத்தேர்தலில் இரண்டில் பாஜகவும் ஒன்றில் காங்கிரஸ் கட்சியும் மற்றொன்றில் கம்யூனிஸ்ட் கூட்டணியும் வெற்றி பெற்றுள்ளன.
இதையும் படிங்க: சிதம்பரத்தை தொடர்ந்து சரத் பவார்! - மத்திய அரசின் கனல் பார்வையில் தகிக்கும் தலைவர்கள்