கொல்கத்தா: செவ்வாய்க்கிழமை நடந்த அமைச்சரவை கூட்டத்தை நான்கு அமைச்சர்கள் புறக்கணித்த நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து மேலும் சிலர் விலகுவார்கள் என்று அம்மாநில அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு பேச்சு எழுந்துள்ளது.
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையில் செவ்வாய்க்கிழமை (டிச.22) அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் ராஜிப் பானர்ஜி, ரவீந்திரநாத் போஸ், கவுதம் தேப் மற்றும் சந்திரநாத் சின்ஹா ஆகியோர் புறக்கணித்துள்ளனர்.
இவர்களில் ராஜிப் பானர்ஜி வனத்துறை அமைச்சராக உள்ளார். கூச் பெகர் பகுதியை சேர்ந்த ரவீந்திரநாத் போஸ் மேற்கு வங்கம் (வடக்கு) வளர்ச்சி அமைச்சரவாரார்.
டார்ஜிலிங் மாவட்டத்தை சேர்ந்த கவுதம் தேப் சுற்றுலாத்துறை அமைச்சராக உள்ளார். சந்திரநாத் சின்ஹா பிர்பூம் பகுதியை சேர்ந்தவராவார். முதல் இருவரும் அமைச்சரவை கூட்டத்தை நிராகரித்து குறித்து எவ்வித தகவலையும் தெரிவிக்கவில்லை.
ஆனால் கவுதம் தேப் உடல் நிலை சரியில்லை என்றும் சந்திரநாத் சின்ஹா மம்தா பானர்ஜி கலந்துகொள்ளும் கூட்டத்திற்கான பணிகளை மேற்கொண்டுவருகிறார் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் வருகிற மே மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இங்கு ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், பாஜக இடையே பலத்த போட்டி உருவாகியுள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகர் சுவேந்து அதிகாரி அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த பிறகு அங்கு அரசியல் பரபரப்பு உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
இதற்கிடையில் மம்தா பானர்ஜி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் நான்கு அமைச்சர்கள் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: திரிணாமுல் காங்கிரஸில் இணைந்த பாஜக எம்.பியின் மனைவி