ஆந்திர மாநிலம், நெல்லூர் அருகே கண்டெய்னரில் கொண்டு செல்லப்பட்ட ரூ. 4 கோடி மதிப்புள்ள செல்ஃபோன்களை அடையாளம் தெரியாத கும்பல் கடத்திச் சென்றது. ஆந்திராவின் ஸ்ரீசிட்டி சிறப்பு பொருளாதார மண்டலத்தில் தயாரிக்கப்பட்ட செல்ஃபோன்களை ஏற்றிக்கொண்டு கொல்கத்தா நோக்கி கண்டெய்னர் லாரி ஒன்று நேற்று முன்தினம் இரவு சென்று கொண்டிருந்தது. தகாதர்த்தி அருகே தேசிய நெடுஞ்சாலை 16இல் சென்று கொண்டிருந்தபோது கார் மற்றும் லாரியில் வந்த மூன்றுக்கும் அதிகமான நபர்களைக் கொண்ட மர்ம கும்பல் திடீரென கண்டெய்னரை வழிமறித்தது.
கண்டெய்னர் லாரிக்குள் ஏறிய கும்பல், லாரியுடன் சேர்த்து டிரைவரையும் வேறு இடத்திற்கு கடத்திச் சென்றனர். பின்னர் அதில் இருந்த ரூ. 4 கோடி மதிப்புள்ள செல்ஃபோன்களைத் தாங்கள் கொண்டு வந்த லாரியில் ஏற்றிக்கொண்டு தப்பிச் சென்றனர். இதையடுத்து பித்ரகுண்டா அருகே கண்டெய்னரும், அதன் டிரைவரையும் விட்டுச் சென்றனர். பின்னர் கண்டெய்னர் டிரைவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொண்டு நடந்தவற்றை விவரித்துள்ளார்.
அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், செல்ஃபோன் கடத்தல் கும்பலை வலை வீசி தேடி வந்தனர். இந்நிலையில், கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு சுகேஷ் கடா, சந்தோஷ் ஆகிய இருவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் இந்த கொள்ளை சம்பவத்தில் சர்வதேச கொள்ளையனான ஷேக் ஹமீதுஸ்மான் அலியாஸ் ரீது என்பவருக்கு தொடர்பிருப்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அவரை தேடிவந்த காவல்துறையினர், இன்று கொல்கத்தா பகுதியில் வைத்து அவரைக் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ. 70 லட்சம் ரொக்கம், கடத்தலுக்கு பயன்படுத்திய லாரி, கார், நான்கு செல்ஃபோன்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். மேலும், அவரிடம் நடத்திய விசாரணையில் இந்த கொள்ளை சம்பவத்தில் மேலும் 16 பேருக்கு தொடர்பிருப்பது தெரியவந்துள்ளது.