கரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் நாடாளுமன்றத்தின் மக்களவை, மாநிலங்களவையில் மழைக்கால கூட்டத்தொடர் திட்டமிட்டபடி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் செப்டம்பர் 14ஆம் தேதியன்று தொடங்கியது. கூட்டத்தொடரின் மூன்றாம் நாளான இன்று (செப்.21) மாநிலங்களவையில் கேள்வி நேரத்தில் விவாதம் நடைபெற்றது.
முன்னதாக, இந்தியா முழுவதும் பல்வேறு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை குறிப்பாக, இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள கைதிகளை கோவிட்-19 பரவலைக் கருத்தில்கொண்டு ரூ. 5 ஆயிரம் மதிப்பிலான பத்திரம் மற்றும் இரண்டு பிணைகளுடன் நிபந்தனை பிணையில் விடுவிக்கலாம் என ஏப்ரல் 13ஆம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இதுவரை எவ்வளவு பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்? எனக் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.
இதற்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய், "உச்சநீதிமன்ற உத்தரவுக்கு இணங்க, அஸ்ஸாமில் உள்ள பல்வேறு தடுப்பு மையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 350 கைதிகள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். செப்டம்பர் 16 ஆம் தேதி வரை இரண்டு ஆண்டுகளில் அஸ்ஸாமில் உள்ள பல்வேறு தடுப்பு மையங்களில் பதினைந்து பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 2 ஆண்டுகளில் மொத்தமாக 15 பேர் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளனர்.
மேலும், பலர் மாநிலத்தின் பல்வேறு மருத்துவமனை மையங்களில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்" எனத் தெரிவித்துள்ளார்.