அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வருகின்ற 24, 25 ஆகிய தேதிகளில் இரண்டு நாள் பயணமாக இந்தியா வருகிறார். எனவே, ட்ரம்பின் வருகையை முன்னிட்டு 30 ஆயிரம் பேர் புதிய பேருந்துகள் மூலம் குஜராத் முழுவதிலுமிருந்து அழைத்து வரப்படவுள்ளனர். ஜி.பி.எஸ் பொருத்தப்பட்ட இந்தப் புதிய பேருந்துகளின் நடத்துனர்களும் ஓட்டுநர்களும் தீவிர பரிதோனைக்குப் பின் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும், அவர்களுக்கென பிரத்யேக சீருடைகளும் வழங்கப்பட்டுள்ளது.
இதற்காக குஜராத் மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத்திடமிருந்து சுமார் 2,200 பேருந்துகள் கோரப்பட்டுள்ளது. குஜராத்தின் ராஜ்கோட் நகரத்திலிருந்து மட்டும் 400 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அனைத்து பேருந்துகளிலும் பொருத்தப்பட்டுள்ள ஜி.பி.எஸ் கருவிகளும் ஒரே கட்டுப்பாட்டு அறையிலிருந்து கண்காணிக்கப்படும்.
இந்த பேருந்துகளை இயக்கு சிறந்த திறன் கொண்ட ஓட்டுநர்களையும் நடத்துனர்களையும் வழங்க மாநில போக்குவரத்துக் கழகத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுவரை எந்தவொரு விபத்தையும் ஏற்படுத்தாதவர்களும், கிரிமினல் வழக்குகள் இல்லாதவர்களுமே இதற்காக தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பேருந்துகளில் 20 விழுக்காடு தள்ளுபடியை வழங்கவும் மாநில போக்குவரத்துத் துறை முடிவு செய்துள்ளது. இந்த சிறப்புப் பேருந்து ஏற்பாட்டால் வழக்கமாக இயங்கும் சில உள்ளூர், எக்ஸ்பிரஸ் பேருந்துகளின் சேவைகள் ரத்து செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வன்முறைக்குக் காரணம் சமூக வலைதளங்கள்தான் - ஜம்மு காவல் துறை