இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய முதன்மை அறிவியல் ஆலோசகர் விஜய் ராகவன், "இந்தியாவில் உயர் தரமான தடுப்பு மருந்துகளே உருவாக்கப்படுகின்றன. கோவிட்-19க்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் 30 இந்திய ஆய்வுக் குழுக்கள் ஈடுபட்டுள்ளன.
பொதுவாகத் தடுப்பு மருந்து தயாரிக்க 10 ஆண்டுகள் பிடிக்கும். ஆனால், கோவிட்-19 விஷயத்தில் ஒரே ஆண்டில் தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க வேண்டும் என்பதே உலக நாடுகளின் நோக்கமாக உள்ளது. 2-3 பில்லியன் டாலர் செலவில், உலகம் முழுவதும் 100 தடுப்பு மருந்துகளுக்கான பரிசோதனை நடைபெற்று வருகிறது.
உலகில் உள்ள அத்தனை நாடுகளும் கோவிட்19ஆல் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தடுப்பு மருந்து தயாரான பிறகு அதனை மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு செல்வதும் சவாலான காரியமாக இருக்கும்" என்றார்.
நிதி ஆயோக் உறுப்பினர் மருத்துவர் வி.கே.பௌல் கூறுகையில், "நம் நாட்டின் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனங்கள், மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் அதிக திறன் படைத்தவை. அவர்கள் அனைவரும் கூட்டாகச் சேர்ந்து இந்த நோய்க்கான தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்" என்றார்.
சீனாவில் வூஹான் நகரில் தோன்றிய கோவிட்-19 நோய்த் தொற்று, தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது. இந்தியாவைப் பொறுத்த அளவில் பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்து 60 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. உயிரிழப்பு எண்ணிக்கை நான்கு ஆயிரத்து 531ஆக உள்ளது.
இதையும் படிங்க : நியூசிலாந்து மசூதி துப்பாக்கிச்சூடு வழக்கு : கரோனாவால் குற்றவாளியின் தண்டனை ஒத்திவைப்பு!