ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் ஸ்வர்ணா பேலஸ் என்ற சொகுசு விடுதி, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்கும் மையமாக செயல்பட்டுவந்தது. இங்கு கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 30 பேர், மருத்துவ ஊழியர்கள் 10 பேர் என மொத்தம் 40 பேர் இருந்தனர். இந்நிலையில், இந்த மையத்தில் நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 9) மின் விபத்து ஏற்பட்டது.
விடுதியில் மருத்துவ சிகிச்சைக்காக பல்வேறு ரசாயனப் பொருள்கள் வைக்கப்பட்டிருந்ததால், விடுதியில் ஏற்பட்ட தீ மளமளவென அனைத்து இடங்களுக்கும் பரவத் தொடங்கி, நிகழ்விடத்திலேயே ஒன்பது பேர் மூச்சுத் திணறி உயிரிழந்தனர். மேலும், பெண் ஒருவர் உடலில் தீக்காயம் ஏற்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததைத் தொடர்ந்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10ஆக அதிகரித்தது.
இந்த விபத்து தொடர்பாக விரைந்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்பிக்குமாறு முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டிருந்தார். மேலும், இந்த விபத்து தொடர்பான விசாரணைக்காக குழு ஒன்றையும் அமைத்தார்.
இந்த குழு நடத்திய விசாரணையில், சொகுசு விடுதி ஸ்வர்ணா பேலஸ், ரமேஷ் மருத்துவமனை ஆகியவற்றில் மின் பழுது ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதையறிந்தும், மருத்துவமனையின் தலைமை நிர்வாக அலுவலர் கோடாலி ராஜா, மருத்துவர் குராபதி சுதர்சன், வெங்கடேஷ் ஆகியோர் பழுதை சரிசெய்வதில் அலட்சியம் செய்தது தெரியவந்துள்ளது.
இதன் காரணமாகவே விபத்து நடந்ததாகவும், விபத்துக்கு மூவரும் பொறுப்பாளர் எனக்கூறி, காவல் துறையினர் இவர்களை கைது செய்தனர்.