2ஜி அலைக்கற்றை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் ஆ. ராசா, கனிமொழி உள்ளிட்டோர் 2017ஆம் ஆண்டு டிசம்பர் 21ஆம் தேதி வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர். இவர்களை விடுதலை செய்வதற்கான தீர்ப்பை எதிர்த்து சிபிஐ மேல்முறையீட்டு மனுவை டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
இந்த வழக்கு கிடப்பில் போடப்பட்ட நிலையில், விசாரணையை விரைந்து முடிக்கக் கோரி அண்மையில் சிபிஐ மனுதாக்கல் செய்தது. இதைத்தொடர்நது, 2ஜி வழக்கு நாள்தோறும் விசாரிக்கப்படும் என அக்டோபரில் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ஆ. ராசா, கனிமொழி ஆகியோர் தரப்பில், சிபிஐ மேல்முறையீட்டு மனுவை ரத்து செய்யுமாறும், மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்வதற்கான முடிவை எடுப்பதற்குமுன் பின்பற்ற வேண்டிய செயல்முறை அடங்கிய ஆவணங்களை பதிவு செய்யுமாறும் அரசுக்கு அறிவுறுத்தக்கோரியும் வழக்கு தொடரப்பட்டது.
இவ்வழக்கு இன்று (நவ. 23) விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி பிரிஜேஷ் சேத்தி, மேல்முறையீட்டு மனு முறையாகத்தான் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது என்றும் மேல்முறையீட்டுக்குமுன் பின்பற்ற வேண்டிய செயல்முறைகளை பதிவு செய்யவேண்டிய கடமை அரசுக்கு இல்லை என்றும் கூறி மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
மேலும், நீதிபதி பிரிஜேஷ் சேத்தி நவம்பர் 30ஆம் தேதியுடன் ஓய்வு பெறுவதால், மேல்முறையீட்டு மனுக்கள் வேறொரு நீதிபதியின் முன் டிசம்பர் 1ஆம் தேதி பட்டியலிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மத்திய அரசை எதிர்த்ததால்தான் 2ஜி வழக்கை தோண்டுகிறார்கள் - கனிமொழி காட்டம்!