கரோனா வைரஸ் நோய் நாட்டில் வேகமாக பரவிவருகிறது. ஊரடங்கால் நோய் பரவலை தற்காலிகமாகவே தடுத்து நிறுத்த முடியும். ஆனால் அது தீர்வல்ல, நோயைக் கண்டறிவதற்கான பரிசோதனை உபகரணங்கள் நாட்டில் போதுமான அளவு இல்லை என ராகுல் காந்தி மத்திய அரசை கடுமையாக விமர்சித்திருந்தார்.
இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் பேசியுள்ள சுகாதாரத்துறை கூடுதல் செயலர் லவ் அகர்வால், "முடிவுகளே முக்கியம். நோய் அறிகுறிகள் தென்படும் 24 பேரில் ஒருவருக்கு மட்டுமே கரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது, மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் விளைவே ஆகும்.
விதிகளின்படி நோய் பரிசோதனைக்கு அனைவரும் உட்படுத்தப்படுகிறார்களா என்பதை உறுதி செய்ய விரும்புகிறோம். தெலங்கானா, மேற்கு வங்கம், உத்தரகாண்ட், ஜம்மு காஷ்மீர், மணிப்பூர், உத்தரப் பிரதேசம், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, பஞ்சாப் உள்ளிட்ட 17 மாநிலங்களில் உள்ள 27 மாவட்டங்களில் கடந்த 14 நாள்களில் யாரும் நோயால் பாதிக்கப்படவில்லை.
இதனால், இந்த 27 மாவட்டங்கள் நோய் பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளாக குறிப்பிடப்படும் ரெட் ஸோன் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டு ஆரஞ்சு ஸோன் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த நிலைமை தொடர்ந்தால், அவை கிரீன் ஸோன் பட்டியலில் சேர்க்கப்படும். நாடு முழுவதும் 325 மாவட்டங்களில் கரோனா பாதிப்பு முற்றிலுமாக இல்லை" என்றார்.
இதையும் படிங்க: உலக ஹீமோபிலியா தினம் - நாம் அறிந்துகொள்ள வேண்டியவை...