மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் அரசியல், கலை, அறிவியல், விளையாட்டு, சமூக சேவை உள்ளிட்டவைகளுக்காக பத்ம விருதுகள் வழங்கி கௌரவித்துவருகிறது. அந்த வகையில் 2020ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் மத்திய அரசால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் பத்ம விபூஷண் விருதானது ஏழு பேருக்கும், பத்ம பூஷண் 16 பேருக்கும், பத்ம ஸ்ரீ 118 பேருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளன.
பத்ம விபூஷண் விருதானது முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி, சுஷ்மா சுவராஜ், குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் உள்ளிட்ட ஏழு பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், பத்ம பூஷண் விருதானது மறைந்த முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர், தமிழ்நாட்டைச் சேர்ந்த கிருஷ்ணம்மாள் ஜெகநாதன், வர்த்தகம் மற்றும் தொழில் துறையில் வேணு சீனிவாசன், ஆனந்த் மகேந்திரா, பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து உள்ளிட்ட 16 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பத்ம ஸ்ரீ விருது, தமிழ்நாட்டைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி சமூக சேவகர் எஸ். ராமகிருஷ்ணன், கேரளாவைச் சேர்ந்த பொம்மலாட்ட கலைஞர் மூழிக்காள் பங்கஜாக்சி உள்ளிட்ட 118 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளன.