மத்திய நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜூலை 5ஆம் தேதி நாடாளுமன்றத்தில் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். மோடி தலைமையிலான பாஜக இரண்டாவது முறையாக ஆட்சியைப் பிடித்ததும் தாக்கல் செய்யப்பட்ட இந்த நிதிநிலை அறிக்கை, கடந்த வாரம் மாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் மக்களவையில் இது குறித்து நடைபெற்ற விவாதத்தில், பணவீக்கம் மிகக் குறைவாக உள்ளதால் பெட்ரோல் டீசல் மீதான இரண்டு ரூபாய் வரி உயர்வு அடித்தட்டு மக்களைப் பாதிக்காது என்றார். மேலும் பணக்காரர்களிடம் அதிக வரி வசூலிப்பதன் மூலம் கறுப்புப் பண பதுக்கல் குறைக்கப்படும் என்றும் புதிய இந்திய உருவாக்க அது பயன்படும் என்றும் கூறினார்.
இந்த விவாதத்திற்குப் பிறகு மக்களவையிலும் 2019-20 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. மக்களவையில் நடைபெற்ற இந்த விவாதத்தின்போது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் காஷ்மீர் விவகாரத்தில் கூறிய கருத்துக்குப் பிரதமர் மோடி விளக்கம் தர வேண்டும் என வலியுறுத்தி பெரும்பான்மையான எதிர்த்கட்சிகள் வெளிநடப்பு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.