புதுச்சேரியில் பல்வேறு பகுதிகளில் திருட்டுபோன இருசக்கர வாகனங்களைப் புதுச்சேரி காவல்துறையினர் கண்டுபிடித்து மீட்டுள்ளனர். இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்தப் பேசிய புதுச்சேரி கிழக்குப் பகுதி காவல் கண்காணிப்பாளர் மாறன், "புதுச்சேரியில் கடற்கரை சாலை, வீட்டு வாசல்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் காணாமல் போனதாகப் புகார்கள் வந்ததை அடுத்து, காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆராய்ந்தபோது அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் அந்த பகுதியில் இருசக்கர வாகனங்களை திருடி சென்றது தெரியவந்தது.
இந்நிலையில், புதுவை சோனம் பாளையம் சந்திப்பில், தீனதயாளன், நதீஷ் குமார் ஆகிய இருவரும் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தை காவல் துறையினர் தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில் அவர்களிடம் உரிய ஆவணங்கள் இல்லை என்பது கண்டறியப்பட்டது.
தொடர்ந்து, அவர்களிடம் விசாரித்தபோது அவர்களில் ஒருவர் பொறியியல் கல்லூரி மாணவர் என்பதும், மற்றவர் பாலிடெக்னிக் மாணவர் என்பதும் தெரியவந்தது. மேலும், அந்த இருசக்கர வாகனத்தை தாங்கள் திருடியதாக அந்த மாணவர்கள் ஒப்புக்கொண்டனர்.
பின்னர், அவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து மூன்று இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவற்றின் மதிப்பு ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் ஆகும். மேலும், இவர்களது கூட்டாளியான அரவிந்த் என்பவரை தேடி வருகிறோம்" என்றார்.