பாகிஸ்தானில் இஸ்லாமாபாத்திலுள்ள இந்தியத் தூதரகத்தில் பணியாற்றும் டி பிரம்மா மற்றும் பால் செல்வதாஸ் ஆகிய இரண்டு சிஐஎஸ்எஃப் (மத்திய தொழில் துறை பாதுகாப்புப் படை) பணியாளர்களும், இன்று( ஜூன் 15) காலை முதல் திடீரென மாயமானதால் பதற்றம் ஏற்பட்டது. சுமார் இரண்டு மணி நேரமாக அலுவலர்களை தொடர்பு கொள்ள முடியாததால் மத்திய அரசு அலுவலர்கள் மாயமானது தொடர்பாக பாகிஸ்தான் அரசுக்குத் தகவல் அனுப்பியது.
பின்னர், சிறிது நேரத்தில் சாலை விபத்தை ஏற்படுத்தியதாக இந்தியத் தூதர்கள் இருவரும் கைது செய்யப்பட்டதாக பாகிஸ்தான் ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
இதையடுத்து, மத்திய அரசு, இந்தியத் தூதுரகத்தின் அலுவலர்கள் இருவரையும், அவர்களின் வாகனத்தையும் உடனடியாக விடுவிக்கும்படி பாகிஸ்தான் அரசிடம் வலியுறுத்தியது.
இந்நிலையில், தற்போது 12 மணி நேரத்திற்குப் பிறகு இந்தியத் தூதரகத்தின் அலுவலர்கள் விடுவிக்கப்பட்டு மீண்டும் தங்களது பணிகளில் திரும்பியுள்ளதாக அதிகாரப்பூர்வத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக, பாகிஸ்தான் அலுவலர்கள் இரண்டு பேர் இந்தியாவில் உளவாளியாக செயல்பட்டதாக குற்றம்சாட்டி வெளியேற்றப்பட்டனர்.