மாநிலங்களவைச் செயலகத்தில் பணிபுரியும் அலுவலர் ஒருவருக்கு கரோனா வைரஸ் (தீநுண்மி) நோய் உறுதிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து, நாடாளுமன்ற வளாகத்தின் இரண்டு தரை தளத்திற்கு சீல்வைக்கப்பட்டுள்ளது.
இதுவரை, நாடாளுமன்றத்தில் பணிபுரியும் நான்கு பேர் கரோனா தீநுண்மி நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் மூவர், இரண்டாம் கட்ட ஊரடங்கு முடிந்து வேலைக்குத் திரும்பியவர்கள் ஆவர்.
செயலகத்தில் பணிபுரிந்த அந்த அலுவலரின் குடும்பத்தினர் சிலருக்கும் கரோனா தீநுண்மி நோய் உறுதிசெய்யப்பட்டுள்ளது. முன்னதாக, மக்களவைச் செயலகம் மொழிப்பெயர்ப்புத் துறையில் பணிபுரிந்த ஒருவருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டது. அவரைத் தவிர, நாடாளுமன்றத்தில் பணிபுரிந்த தூய்மைப் பணியாளர், பாதுகாப்பு அலுவலர் ஆகியோர் கரோனா தீநுண்மி நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மக்களவைச் செயலக அலுவலர் ஒருவருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து, மக்களவை வளாகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. மருத்துவப் பரிசோதனைக்குப் பின்னரே, நாடாளுமன்றத்திற்குள் ஊழியர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வளாகத்திற்கு நுழையும் அனைத்து வாகனங்களிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. நாடாளுமன்றத்தில் அறிகுறிகள் தென்படாமல் பலர் கரோனா தீநுண்மி நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இதையும் படிங்க: ஓபிசிக்கு 27% இட ஒதுக்கீடு: உச்ச நீதிமன்றத்தில் அன்புமணி வழக்கு