டெல்லி திறந்த வெளி பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு படித்து வருபவர் ராகுல் ராஜ்புட். இவர் பள்ளிக் குழந்தைகளுக்கு பகுதி நேர பயிற்சி வகுப்புகள் நடத்திவருகிறார். இவரும் அப்பகுதியில் வசித்து வரும் ஒரு பெண்ணும் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நண்பர்களாக பழகி வருகின்றனர்.
இதனிடையே கடந்த புதன்கிழமை அந்தப் பெண்ணின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ராகுல் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். அதில் ராகுல் உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து காவல் துறையினர் கூறுகையில், ''ராகுல் ராஜ்புட் என்பவரும் அந்தப் பெண்ணும் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். இவர்களது நட்பிற்கு பெண்ணின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனிடையே புதன்கிழமை மாலையன்று, ராகுல் ராஜ்புட் நந்தா சாலைக்கு அழைக்கப்பட்டுள்ளார். அந்தப் பகுதிக்கு அவர் சென்றதும், நான்கு முதல் ஐந்து பேர் ஒன்றாகச் சேர்ந்து அவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். அதில் அந்தப் பெண்ணின் சகோதரரும் இருந்துள்ளார்.
அந்தத் தாக்குதலில் ராகுலுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதன்பின்னர் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது. ஆனால் சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
ஆனால் அவருக்கு வெளிப்படையாக எவ்வித காயங்கள் தெரியவில்லை. அவரது உடற்கூறாய்வு அறிக்கையில், மண்ணீரல் சிதைந்ததால் அவர் மரணமடைந்துள்ளார்.
இவரது மரணம் குறித்து காவல் துறையினர் இந்திய தண்டனைச் சட்டம் 302, மற்றும் 34 ஆகியச் சட்டங்களின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகிறோம்'' என்றனர்.
சாலையோரம் இருந்த கண்காணிப்பு கேமராவில் ஒரு பெண்ணை சிலர் வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்வது போன்ற காட்சி பதிவாகியுள்ளது. இதனால் இந்த சிசிடிவி வீடியோ காவல் துறையினர் விசாரணையில் முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ராகுல் மரணம் குறித்து அவரது உறவினர் கூறுகையில், '' ராகுலும், அந்தப் பெண்ணும் இரண்டு வருடங்களுக்கு மேலாக நல்ல நட்பில் உள்ளனர். ஒரே பகுதியில் வசித்து வருகின்றனர். ஆனால் அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் அவர்களது நட்புக்கு எதிராக இருந்தனர். புதன்கிழமை மாலை 7 மணி போல், ராகுலின் நண்பர் ஒருவர் எனக்கு அலைபேசி மூலம் அழைத்து ராகுல் மீது சிலர் தாக்குதல் நடத்திவருகின்றனர் என்றார். அந்த இடத்திற்கு நான் சென்றபோது கொலைவெறித் தனமாக ராகுலை தாக்கிக் கொண்டிருந்தனர்.
ராகுலை அந்தப் பெண்ணின் குடும்பத்தைச் சேர்ந்த பலரும் ஏற்கனவே பலமுறை மிரட்டியுள்ளனர். இதனைப் பற்றி காவலர்களிடம் புகாரளித்துள்ளேன்'' என்றார்.
இதையும் படிங்க: சாதி மறுப்புத் திருமணம் செய்த தம்பதியினர் மீது தாக்குதல்