இந்திய-நேபாள எல்லையான லால்பந்தி-ஜான்கிநகர் பகுதியில் நேபாள ஆயுதப்படை காவலர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கடந்த 12ஆம் தேதி விகேஷ் யாதவ் என்பவர் கொல்லப்பட்டார். உமேஷ் ராம், உதய் தாகூர் ஆகியோர் காயமுற்றனர்.
இந்தச் சம்பவத்தின் போது இந்தியர் லகான் கிஷோர் என்பவர், நேபாள ஆயுதப்படை காவலர்களால் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார். அதன்பின்னர், அவர் சனிக்கிழமை (13ஆம் தேதி) இந்திய பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
ஏற்கெனவே, நேபாள அரசு வெளியிட்ட புதிய வரைபட விவகாரத்தில் இருநாடுகளுக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள சூழலில், இந்தச் சம்பவமானது இந்திய-நேபாள எல்லையில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், நேபாள பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட தாக்குதலைக் கண்ட சாட்சிகள், அதனை கண்ணீர் மல்க விவரித்தனர்.
ஜான்கிநகர் பகுதியைச் சேர்ந்த நித்திஷ் குமார் கூறுகையில், "ஒரு மணி நேரம் தொடர்ந்து 18-20 குண்டுகள் சுடப்பட்டன. அதனைக் கண்டு அதிர்ந்து போனோம். அதனை நினைத்தாலே பீதியில் அனைவரின் ரத்தமும் உறைகிறது"என்றார்.
நேபாள பாதுகாப்புப் படையினர் ஏன் இப்படி நடந்துகொண்டனர் என்பதே, குழப்பமாக உள்ளது என அதே பகுதியைச் சேர்ந்த அஜித் குமார் கூறினார்.
இதற்கு முன் இதுபோன்று எந்தப் பிரச்னையும் நடந்ததில்லை எனக் கூறும் அஜித், துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது துரதிர்ஷ்டவசமானது என்றும், இந்தச் சம்பவம் தங்கள் வாழ்வாதாரத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளதாகவும் வேதனைத் தெரிவித்தார்.
இதனிடையே, நேபாளப் படையினரிடம் இருந்து ஆயுதத்தைப் பறித்துச் செல்ல முயன்றதாக, கிஷோர் மீது அந்நாட்டு அரசு குற்றம்சாட்டியுள்ளது. ஆனால், இந்த குற்றச்சாட்டை கிஷோரும், அவரது குடும்பத்தினரும் மறுத்து விட்டனர்.
சம்பவத்தன்று தன்னை நேபாளப் படையினர் ஃரைபிளை கொண்டு அடித்ததாகவும், நேபாள எல்லைக்குட்பட்ட சங்காம்பூருக்கு தன்னை தரதரவென இழுத்துச் சென்றதாகவும் கிஷோர் விவரித்தார்.
கிஷோரின் மகன் பேசுகையில், "என் மைத்துனனைக் காண நாங்கள் அங்கு சென்றிருந்தோம். அந்த நேரத்தில் தான் நேபாள ஆயுதப் படையினர், எங்களை வழிமறித்து துன்புறுத்தினர். அவர்களின் மொழி எங்களுக்குப் புரியவில்லை. துன்புறுத்துவதை நிறுத்துமாறு, என்னுடைய சகோதரரின் மனைவி வேண்டினார்.
இதன் பிறகு தான் இந்திய எல்லைக்குள் வந்த அவர்கள், என் தந்தையைத் தாக்கி அவரை பிடித்துச் சென்றனர். அவருடன் வந்த சக வீரர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியானார்" என்றார்.
இதையும் படிங்க : ஆஸ்திரேலியாவில் காலனி ஆதிக்கவாத சிலைகள் சூறையாடல்!