ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தில் உள்ள ஜேஷோல் பகுதியில் ‘ராம கதை’ விழா நடைபெறவிருந்தது. இந்த விழாவில் ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்கவிருந்த நிலையில், பிரமாண்ட பந்தல் போடப்பட்டிருந்தது.
இந்நிலையில், அப்பகுதியை இன்று மாலை 3.30 மணியளவில் புயல் தாக்கியதால், அந்த பந்தல் திடீரென சரிந்து விழுந்தது. இந்த விபத்தில் சிக்கி 3 பெண்கள் உட்பட 14 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும், 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில், அருகில் உள்ள மருத்துவமனையில் அவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். தீவிர மழையால் மின் கம்பிகள் அறுந்து விழுந்ததால் பீதியடைந்த பொதுமக்கள் நெரிசலில் சிக்கி படுகாயம் அடைந்தனர். இந்த சோக சம்பவத்திற்கு வருத்தம் தெரிவிக்கும் வகையில் பிரதமர் மோடி, ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் ஆகியோர் இரங்கல் தெரிவித்தனர்.