உத்தரப் பிரதேச மாநில காவல்துறையில் ஒரே இரவில் 14 இந்திய காவல் பணி அலுவலர்களை மறுசீரமைப்பு என்ற பெயரில் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, கான்பூர், பிலிபிட், சீதாபூர், ஷாஜகான்பூர், சஹாரான்பூர், பிரயாகராஜ், ஹத்ராஸ், உன்னாவ் மற்றும் பாக்பத் மாவட்டங்களின் காவல்துறைத் தலைவர்கள் நேற்று (ஜூன் 15) இரவு அதிரடியாக இடம் மாற்றப்பட்டுள்ளனர்.
கான்பூரில் பணியாற்றிவந்த மூத்த காவல் கண்காணிப்பாளர் அனந்த் தேவ் திவாரிக்கு, (டி.ஐ.ஜி) காவல்துறை துணைத்தலைவராக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. கான்பூர் காவல்துறை கண்காணிப்பாளராக தினேஷ்குமாரும், எசஹரன்பூர் மாவட்டத்தின் காவல்துறை கண்காணிப்பாளராக எஸ்.சனப்பாவும், பிலிபித் மாவட்டத்தின் காவல்துறை கண்காணிப்பாளராக ஜெய் பிரகாஷ் யாதவும் நியமிக்கப்பட்டுள்னர்.
69,000 ஆசிரியர் பணியிட நியமனத்தில் நிகழ்ந்த மோசடியை அம்பலப்படுத்திய பிரயாகராஜின் மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் சத்யார்த் அனிருத் பங்கஜ் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். அவரது இடத்திற்கு அபிஷேக் தீட்சித் ஐ.பி.எஸ் பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஷாஜகான்பூர் எஸ்.பியாக எஸ்.ஆனந்த், சீதாப்பூர் எஸ்.பியாக ஆர்.பி.சிங், லக்னோ காவல்துறை ஊழல் கண்காணிப்பு பிரிவின் துணைத் தலைவராக எல்.ஆர். குமார், ஹத்ராஸ் எஸ்.பியாக விக்ராந்த் வீர், கௌரவ் பன்ஸ்வா லக்னோவின் குற்றத் தலைமையக இயக்குநரகத்தின் காவல்துறை கண்காணிப்பாளராக முறையே பணியிடம் மாற்றப்பட்டுள்ளனர்.
முன்னதாக, நேற்று முன்தினம் (ஜூன் 14) மாநிலத்தில் ஏழு ஐ.பி.எஸ் அலுவலர்களை மாநில அரசு பணியிடம் மாற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.