ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் உள்ளது குரிச்செடு கிராமம். இங்கு கடந்த சில நாள்களாக கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனால் அக்கிராமத்திலுள்ள இரண்டு அரசு மதுபானக் கடைகளும் பத்து நாள்களுக்கு முன்பு மூடப்பட்டன.
இதனால் சிலர், மதுபானங்களுக்குப் பதில், மருந்துக் கடைகளில் விற்பனை செய்யப்படும் கிருமிநாசினிகளை உட்கொள்ளத் தொடங்கினர். இதன் காரணமாக சில நாள்களுக்கு முன்பு ஒன்பது பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 174-ன் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இந்நிலையில், இன்று(ஆக.1) போதைக்காக கிருமி நாசினியைப் பயன்படுத்திய மேலும் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். இவர்கள் பயன்படுத்திய கிருமிநாசினி பொருள்களையும், பாட்டில்களையும் பரிசோதனைக்காக காவல்துறையினர் அனுப்பிவைத்துள்ளனர். மேலும், இறந்தவர்கள் அனைவரும் கிருமிநாசினி மட்டுமே போதைக்காக எடுத்துக்கொண்டதாகவும், கிருமிநாசினியுடன் கள்ளச்சாராயம் எடுத்துக்கொண்டதாக வெளிவரும் தகவல்கள் முற்றிலும் தவறானது எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.