மேற்குவங்க மாநிலம் வடக்கு பர்கானாஸ் மாவட்டத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த எல்லை பாதுகாப்பு படையின் பஞ்ச்பீரியா, புறக்காவல் நிலையத்தின் சிறப்பு ரோந்து குழுவினர் சட்டவிரோதமாக எல்லையை கடக்க முயன்ற 13 பேரை கைது செய்தனர்.
அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், வங்கதேசத்தைச் சேர்ந்த தாங்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்ததாகக் கூறினர். மேலும், அவர்கள் மும்பையில் கூலியாட்களாக பணிபுரிந்து வருவதாகவும், அங்குள்ள நாலசோபரா பகுதியில் வசிப்பதாகவும் கூறினார்.
வங்கதேசத்தினர் தங்கள் சொந்த இடத்தையும் உறவினர்களையும் பார்வையிட மீண்டும் தங்களது சொந்த நாடிற்கு செல்வதாகக் கூறினர். கொல்கத்தாவை தளமாகக் கொண்ட ஒரு குழு அவர்களுக்கு உதவியிருப்பதாக எல்லை பாதுகாப்பு படையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் பாக்தா பகுதியில் உள்ள ஒரு முகவரின் உதவியுடன் எல்லையை கடக்க முயன்றது தெரியவந்தது. மேலும், இதற்காக அவர்கள் ஒரு லட்சம் ரூபாய் செலுத்தியதாக தெரிவித்தனர்.
அவர்களிடமிருந்து ரூ. 1.27 லட்சம் ரொக்கம், தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்கள், ஒரு எல்சிடி திரை உள்ளிட்ட பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. எல்லையை கடக்க முயன்ற 13 பேரும் சட்ட நடவடிக்கைகளுக்காக பாக்தா காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.