ஹரியானா மாநிலம் நூ (nuh) நகரத்தில் போதைப் பொருள்கள் புழக்கம் அதிகரிப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் பாஜ்லகா கிராமத்தில் தாசில்தாருடன் இணைந்து காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, ஒரு வீட்டில் ஏழு பாலிதீன் கவர்களில் 127.8 கிலோ அளவில் கஞ்சா இருப்பது கண்டறியப்பட்டது. காவல்துறையினரின் இந்த அதிரடி சோதனைக்கு முன்னரே அந்த வீட்டிலிருந்தவர்கள் தப்பியதாகக் கூறப்படுகிறது. இது குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதே போல், நூ நகரத்தில் மற்றொரு இடத்தில் தடைசெய்யப்பட்ட மருந்து பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. புன்ஹானா சாலையில் சிவில் மருத்துவமனைக்கு அருகே காவல்துறையினர் உத்தரப் பிரதேச பதிவு எண் கொண்ட ஒரு வாகனத்தில் சோதனை மேற்கொள்ளும்போது தடைசெய்யப்பட்ட மருந்துகள் இருப்பது தெரியவந்தது.
இந்த வாகனத்தில் 40 பெட்டிகளில் 4 ஆயிரத்து 800 பாட்டில்களில் தடைசெய்யப்பட்ட மருந்துகள் இருந்தன. இதையடுத்து, இக்கடத்தலில் ஈடுபட்ட இருவரை காவல்துறையினர் கைது செய்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதல்கட்ட விசாரணையில் இக்கடத்தலில் ஈடுபட்டவர்கள் உத்தரப் பிரதேச மாநிலம், மதுரா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்தது.
இதையும் படிங்க: எஸ்பிஐ வங்கியில் வீட்டிலிருந்தபடியே உடனடி சேமிப்புக் கணக்கு; ஆதார் அவசியம்!