விமானப் போக்குவரத்து தொடர்பாக டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, "கொரோனா வைரஸ் காரணமாக உள்நாட்டு பயணிகளின் எண்ணிக்கை 10லிருந்து 15 விழுக்காடு வரை குறைந்துள்ளது. ஆனால், விரைவில் இயல்பு நிலை திரும்பிவிடும்.
கொரோனா வைரஸை காரணம்காட்டி எந்த விமான நிறுவனமும் கடன் தள்ளுபடி கேட்டு அரசிடம் வரக்கூடாது. நிலமையை சமாளிக்க, 30 நாள்களுக்கு விமான எரிபொருளை கடனாகத் தரும்படி எண்ணெய் நிறுவனங்களை அணுகுங்கள்.
கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதால், 15 நாள்களுக்கு விமான எரிபொருளை குறைந்த விலையில் தரும்படி எண்ணெய் அமைச்சகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளேன்.
விமான எரிபொருளை ஜிஎஸ்டி-க்குள் கொண்டு வருவது குறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் பேசியுள்ளேன்.
தற்போதைய நிலவரப்படி, வெளிநாடுகளிலிருந்து இந்தியா வந்த 10 ஆயிரத்து 876 விமானங்களைச் சோதனையிட்டுள்ளோம். மேலும், 12 லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகளைப் பரிசோதித்துள்ளோம்" எனத் தெரிவித்தார்.
சீனாவின் வூஹான் நகரில் தோன்றிய கோவிட்-19 (கொரோனா) வைரஸ் தற்போது உலகம் முழுவதும் வேகமாகப் பரவி வருகிறது. இந்தியாவில் இதுவரை 90க்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். நிலமையை சமாளிக்க மத்திய அரசு கோவிட்-19 வைரஸை தேசியப் பேரிடராக அறிவித்துள்ளது.
இதையும் படிங்க : வீட்டில் சகோதரியின் சடலத்துடன் ஒரு வாரம் தங்கியிருந்த அண்ணன்: இத்தாலியில் அவலம்