மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலிருந்து லாரியில் மறைத்து கொண்டு வரப்பட்ட 1,106 கிலோ கஞ்சாவை ஹரியானா மாநில காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
ஹரியானா மாநிலம் கைதால் பகுதியில் வந்த லாரி ஒன்றை காவலர்கள் சோதனை செய்தனர். அப்போது எலுமிச்சை பைகளுக்குள் மறைத்து வைத்து சுமார் 876 கிலோ கஞ்சா கொண்டுவரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த குற்றத்தில் ஈடுபட்ட இருவரை காவலர்கள் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரிடமிருந்து இந்த போதைப்பொருள்கள் கொண்டு வந்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இரண்டாவது சம்பவத்தில் ராஜஸ்தானிலிருந்து லாரியில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து காவலர்கள் பஞ்ச்குலா பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த லாரியை சோதனை செய்தபோது சுமார் 200 கிலோ கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து காவல் துறையினர் இதனை பறிமுதல் செய்து, கஞ்சாவை கடத்திவந்தவர்களைக் கைதுசெய்தனர்.
லாரியில் கஞ்சாவை கடத்திவந்த இந்த இரண்டு சம்பவங்களிலும் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் காவலர்கள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: ஐந்து கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள்கள் பறிமுதல்