பாகிஸ்தானில் சிந்து மாகாணத்தை பூர்வீகமாகக் கொண்ட இந்து குடும்பத்தினர், நீண்டகால விசாவில், 2015ஆம் ஆண்டு ராஜஸ்தானுக்கு வந்தனர். கடந்த ஆறு மாதங்களாக ஜோத்பூர் மாவட்டம் லோட்தா கிராமத்தில் ஒரு பண்ணையை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்துவந்தனர். இவர்கள் அங்கேயே ஒரு குடிசையில் தங்கி இருந்தனர்.
இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி அக்குடும்பத்தை சேர்ந்த 11 பேரும் சந்தேகமான முறையில் இறந்து கிடந்தனர். அந்த குடும்பத்தை சேர்ந்த கேவல் ராம் (35) என்பவர் மட்டும் உயிருடன் இருந்தார். தகவலறிந்து அங்கு விரைந்து வந்த காவலர்கள் 11 பேரின் உடல்களை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இது குறித்து காவல்துறையினர் கூறுகையில், 11 பேரின் மரணத்துக்கான காரணம் தெரியவில்லை. ரசாயன வாசனை வீசுவதால், அவர்கள் ஏதோ ரசாயனத்தை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கருதுகிறோம். மற்றபடி உடல்களில் காயம் ஏதும் இல்லை. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றனர்.