குடியுரிமை சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நேற்று நிறைவேறியது. இந்த மசோதாவுக்கு 311 உறுப்பினர்கள் ஆதரவாகவும் 80 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர். இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வடகிழக்கு மாநிலங்களில் தொடர் போராட்டம் நடைபெற்றுவருகிறது. பூர்வகுடி மக்களின் உரிமைகள் இந்த மசோதாவால் பறிக்கப்படும் என பல்வேறு தரப்பினர் குற்றம்சாட்டிவருகின்றனர்.
மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்விதமாக வடகிழக்கு மாணவர் அமைப்பு சார்பாக கடையடைப்புப் போராட்டம் இன்று அறிவிக்கப்பட்டிருந்தது. பலம்வாய்ந்த மாணவர் அமைப்பு என்பதால் காங்கிரஸ், ஐக்கிய ஜனநாயக முன்னணி உள்ளிட்ட கட்சிகள் இதற்கு ஆதரவு தெரிவித்திருந்தது. அஸ்ஸாம், அருணாச்சலப் பிரதேசம், மேகாலயா, மிசோரம், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், 11 மணி நேர பந்த் காரணமாக இணைய சேவைகள் திரிபுராவில் முடக்கப்பட்டுள்ளன.
நாகாலாந்தில் பாரம்பரிய, கலாசார திருவிழா நடைபெறுவதால் அங்கு கடையடைப்புப் போராட்டம் நடத்தப்படவில்லை. இடதுசாரி மாணவர் அமைப்புகள் அஸ்ஸாமில் 12 மணி நேர கடையடைப்புப் போராட்டம் நடத்திவருகிறது. இதனால், பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
அஸ்ஸாம் முதலமைச்சர் வீட்டிற்கு முன்பு மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். பல்வேறு பகுதிகளில் பல்வேறு மாணவர் அமைப்பு சார்பாகப் போராட்டம் நடத்தப்பட்டுவருகிறது. மாணவர்களை கலைக்க காவல் துறையினர் தடியடி நடத்தியுள்ளனர். இதனால் வடகிழக்கு மாநிலங்களில் பதற்றம் நிலவிவருகிறது.
இதையும் படிங்க: தலைவர்களை விடுதலை செய்வதில் மத்திய அரசின் தலையீடு இருக்காது - அமித் ஷா