வடகிழக்கு மாநிலங்களில் டெங்கு காய்ச்சலால் தொடர்ந்து உயிரிழப்புகள் அதிகரித்துவருகின்றன. குறிப்பாக அஸ்ஸாம் மாநிலத்தில் டெங்கு காய்ச்சலால் 102 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
2018ஆம் ஆண்டு டெங்கு காய்ச்சலால் 94 பேரும், 2017ஆம் ஆண்டு 87 பேரும், 2016ஆம் ஆண்டு 92 பேரும் உயிரிழந்துள்ளனர். ஆனால், இந்தாண்டு பலி எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது. இது அம்மாநில மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 100 பேர் அம்மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருவதாக அரசு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
வடகிழக்கு மாநிலங்களில் மலைப்பகுதிகள் அதிகம் உள்ளதால் மருத்துவ வசதிகளை அனைத்து இடங்களுக்கும் கொண்டுபோய் சேர்ப்பது சவாலான விஷயமாக உள்ளதாக சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.