புதுச்சேரி - மரக்காணம் அருகே நள்ளிரவில் நிவர் புயல் கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால், புதுச்சேரி முழுவதும் மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புயல் காரணமாக, புதுச்சேரி மற்றும் காரைக்காலுக்கு நாளை (நவம்பர் 26) பொது விடுமுறை வழங்கி யூனியன் பிரதேச அரசு அறிவித்துள்ளது.
இதனிடையே, புயல் கரையை கடப்பதையொட்டி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி இன்று (நவம்பர் 25) மீண்டும் ஆய்வு செய்தார். அப்போது, தேவை ஏற்படும் பட்சத்தில் மீட்பு பணிக்கு ஹெலிகாப்டரை பயன்படுத்தலாம் என்று பேரிடர் மேலாண்மை துறை அலுவலர்களுக்கு ஆணையிட்டார்.
இந்நிலையில் மாவட்ட பேரிடர் பாதுகாப்பு நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், "புதுச்சேரியில் 206 அரசு நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில், தாழ்வான பகுதியில் இருந்த 1000 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மேலும், தாழ்வான பகுதியில் இருந்த மக்கள் முகாம்களில் தங்காமல் பாதுகாப்பான இடங்களில் உள்ள உறவினர்கள் வீடுகளில் தங்கியுள்ளனர். நாள் ஒன்றுக்கு 5000 பேருக்கு அரசு சமையல் கூடம் மூலம் உணவு வழங்கப்பட்டு வருகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.