பாட்னா: பிகார் மாநிலத்தில் முதற்கட்டமாக நூறு பேருக்கு கரோனா தடுப்பு மருந்து செலுத்தப்படும் என மத்திய சுகாதார மற்றும் மக்கள் நல்வாழ்த்துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் சவுபே தெரிவித்துள்ளார்.
இன்று (டிசம்பர் 14) செய்தியாளர்களை சந்தித்த அவர், "கரோனா சிகிச்சைக்கு தேவையான உபகரணங்கள் குறைபாடு உடைய மாநிலங்களுக்கு முதற்கட்டமாக தேவையான உபகரணங்களை அனுப்ப உள்ளோம். ஒரு முகாமில் நாளொன்றுக்கு 100 பேருக்கு மட்டுமே கரோனா தடுப்பு மருந்து வழங்கப்படும். பிறகு அனைவருக்கும் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்படும்" என்றார்.
முன்னதாக பாஜக வெளியிட்ட பிகார் மாநிலத் தேர்தல் அறிக்கையில் அம்மாநில மக்கள் அனைவருக்கும் இலவச கரோனா தடுப்பு மருந்து வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டிருந்தது.
மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவின் பாதுகாப்பு வாகனம் தாக்கப்பட்டது தொடர்பாக பேசிய அவர், " விரைவில் மம்தா பானர்ஜி தலைமையிலான அரசை மேற்கு வங்க மக்கள் தூக்கி எறிவார்கள். கூடிய விரைவில் ஜே.பி.நட்டா மேற்கு வங்கத்தில் மீண்டும் பேரணி நடத்துவார்" என்றார்.
இதனைத்தொடர்ந்து, டெல்லியில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக பேசிய அவர், "70 ஆண்டுகளுக்கு பிறகு மோடி தலைமையிலான மத்திய அரசு விவசாயிகளின் நலன் குறித்து சிந்தித்து செயல்பட்டு வருகிறது. ஒரு விவசாயியின் மகனாய் எனக்கு அவர்களது வலியை புரிந்துகொள்ள முடிகிறது. விவசாயிகளின் வருவாயை எவ்வாறு அதிகரிப்பது, லாபத்தை எவ்வாறு அதிகரிப்பது என அவர்களது நலன் கருதி மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. விவசாயிகள் இடையேயான இடைதரகர்களை நீக்குவோம்" என்றார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் 8 லட்சத்தை கடந்தது கரோனா பாதிப்பு