ஆந்திராவில் வியாழக்கிழமை (ஏப்ரல்9) பரவலாக கோடை மழை பெய்தது. குறிப்பாக நெல்லூர், குண்டூர் மற்றும் பிரகாசம் உள்ளிட்ட மாவட்டங்களில் மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.
இந்நிலையில் மின்னல் தாக்கியதில் நெல்லூர் மாவட்டத்தில் ஏழு பேரும், குண்டூரில் இருவரும், பிரகாசம் மாவட்டத்தில் ஒருவரும் உயிரிழந்தனர். முன்னதாக, “மாநில பேரிடர் ஆணைய அலுவலர்கள் கடும் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
அதில் மின்னல், இடியுடன் கூடிய கனமழை பெய்துவருவதால் யாரும் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம்” என அறிவுறுத்தியிருந்தனர். இது தொடர்பாக பேரிடர் நிர்வாக ஆணையர் கன்னா பாபு கூறுகையில், “இதுபோன்ற துயரங்களை தவிர்க்க அரசாங்கம் விடுக்கும் எச்சரிக்கைகளை மதித்து வீட்டில் அல்லது பாதுகாப்பான இடங்களில் இருங்கள்.
குறிப்பாக இடியுடன் கூடிய மழை அல்லது மின்னல் ஏற்படும் போதெல்லாம் விவசாயிகள், கால்நடை வளர்ப்பவர்கள் உடனே பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும்” என்றார்.