கர்நாடகா : ஷிவமொக்காவில் உள்ள சீகேஹட்டியில் 24 வயது இளைஞரை ஒரு கும்பல் கொடூரமாக கொலைசெய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்ட நபர் ஹர்ஷா என்பது தெரியவந்துள்ளது. மேலும், இவர் டெய்லராகப் பணிபுரிந்து வந்தார். மேலும் அவர் பஜ்ரங் தள் அமைப்பில் இருந்துள்ளார்.
இந்த கொடூரக் கொலைக்கு பிறகு, பல்வேறு இந்து அமைப்பினர் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, ஹர்ஷாவின் உடல், உடற்கூராய்வு செய்யப்பட்ட மெக்கன் மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையில், போராட்டத்தில் ஈடுபட்ட சிலர் ஷிவமொக்கா நகரின் சீகேஹட்டி பகுதியில் பல வாகனங்களுக்கு தீ வைத்தனர். இதையடுத்து, தீயணைப்பு துறையினர் சம்பவயிடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
ஷிவமொக்காவில் 144 தடை
தற்போது ஷிவமொக்காவில் பாதுகாப்பு பலபடுத்தப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் காவலர்கள் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், அங்கு கலவரம் நிகழா வண்ணம் 144 தடை விதிக்கப்பட்டுள்ளது. 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டது.
முன்னதாக, கர்நாடகா உயர் நீதிமன்றம் கடந்த சில நாள்களுக்கு முன்னர், மத அடையாளங்களை வெளிப்படுத்தும்விதமாக ஹிஜாப், காவி சால்வை, மதக் கொடிகள் உள்ளிட்டவற்றை அணிந்தோ, கையில் ஏந்தியோ கல்வி மையங்களுக்குள் (பள்ளி, கல்லூரிகள்) வரும் மாணவர்களை அனுமதிக்கக் கூடாது என இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.
மேலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையும் அறிவிக்கப்பட்டிருந்தது. மாநிலத்தின் மிகவும் பதற்றமான பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு காவல் துறையினரின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டது.
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தடை உத்தரவை மீறி மாணவிகள் மத அடையாளத்தை வெளிப்படுத்தும்விதமாக ஹிஜாப் அணிந்துவந்து கல்லூரிகளுக்குள் அனுமதிக்குமாறு நிர்வாகத்தை வற்புறுத்தினர். முக்கியமாக கொப்பல், பெல்காவி, விஜயபூர், சிக்கமக்களூரு, ஷிவமொக்கா ஆகிய இடங்களில் இது தொடர்பான போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில், தற்போது பஜ்ரங் தள் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் ஷிவமொக்காவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
ஹிஜாப் விவகாரத்திற்கு பின்னால் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு: கர்நாடக அமைச்சரின் சர்ச்சை பேச்சு