பஞ்சாபில் சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடந்துவருகிறது. இந்த தேர்ததலில் ஆம் ஆத்மி கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக பகவந்த் மான், தூரி தொகுதியில் போட்டியிட்டார். பிற்பகல் 2.30 நிலவரப்படி பகவந்த் மான் தன்னை எதிர்த்துப்போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் தல்வீர் சிங் கோல்டியை விட 60,000 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். ஏற்கனவே ஆம் ஆத்மி பஞ்சாப்பில் மொத்தமுள்ள 117 தொகுதிகளில் 93 தொகுதிகளில் முன்னிலை வகித்துவருகிறது.
இந்த வெற்றி குறித்து பகவந்த் மான் கூறுகையில், "பஞ்சாப்பில் ஆம் ஆத்மிக்கு வாக்களித்தவர்களுக்கும், வாக்களிக்காதவர்களுக்கும் நன்றி. இரு தரப்பினரையும் ஒரே மாதிரியாகவே நடத்துவேன். வேலையில்லாத் திண்டாட்டத்தைக் குறைக்க எனது முதல் நாளிலேயே பச்சை பேனாவை பயன்படுத்துவேன்" எனத் தெரிவித்தார்.
பஞ்சாபில் காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் சரண்ஜித் சிங் சன்னி தான் போட்டியிட்ட இரு தொகுதிகளிலும் தோல்வியடைந்துள்ளார். அதேபோல காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவரான நவ்ஜோத் சிங் சித்தும் தனது தொகுதியில் பின்னடைவை கண்டுள்ளார். குறிப்பாக முன்னாள் முதலமைச்சரும் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்னும் கட்சியை தொடங்கியவருமான கேப்டன் அம்ரிந்தர்சிங் தனது சொந்தத் தொகுதியான பாட்டியாலாவில் தோல்வியை தழுவிவிட்டார்.
இதையும் படிங்க: பஞ்சாப் அரசியல் ஜம்பவான்களை துடைத்தெடுத்த ஆம் ஆத்மியின் துடைப்பம்!!!