பாகல்பூர்: பீகார் மாநிலம், பாகல்பூர் மாவட்டம், பாடி கஞ்சர்பூர் பகுதியைச் சேர்ந்தவர், நவால் கிஷோர். இவருக்கும், உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசியை சேர்ந்த மணீஷா குமாரிக்கும் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி, கடந்த ஓராண்டுக்கு முன் திருமணம் நடத்தும் தேதி முடிவு செய்யப்பட்டதுடன், அதற்கு முந்தைய சடங்குகளும் செய்யப்பட்டன.
இந்நிலையில் மணமகள் குடும்பத்தில், சில அப சகுணமான சம்பவங்கள் நடந்ததாக கூறப்படுகிறது. இதனால் திருமணத்தை, மணமகள் வீட்டார் ஒத்திவைத்தனர். இதற்கிடையே மணமகன் கிஷோர் வீட்டிலும் விரும்பத்தகாத சம்பவங்கள் நிகழ்ந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் இரு குடும்பத்தினரும் திருமணத்தை கைவிட முடிவு செய்தனர்.
சில மாதங்களுக்குப் பிறகு, மீண்டும் திருமணத்தை நடத்த மணமகன் கிஷோர் குடும்பத்தினர் முன்வந்தனர். ஆனால், அதற்கு மணமகள் வீட்டில் ஒப்புதல் தெரிவிக்கவில்லை. இதற்கிடையே, கிஷோரும், மணீஷா குமாரியும் நெருங்கி பழகியதால், அவர்களுக்குள் அன்பு மேலோங்கியது. இருவரும் திருமணம் செய்து கொள்வதில் உறுதியாக இருந்தனர்.
இந்நிலையில், 450 கிலோ மீட்டர் பைக்கில் பயணம் செய்த கிஷோர், மணீஷாவை தனது சொந்த ஊருக்கு அழைத்து வந்தார். அங்குள்ள கோயிலில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இதில், மணமகன் கிஷோர் குடும்பத்தினர் மட்டுமே பங்கேற்றனர்.
இதுகுறித்து மணமகள் மணீஷா கூறுகையில், "கிஷோரை எனது கணவராக ஏற்றுவிட்டேன். இனி என்னை அவரிடம் இருந்து பிரிக்க முடியாது. நான் அவருடன் தான் வாழ்வேன்" என்றார். இதுதொடர்பாக பேசிய மணமகன் கிஷோர், "நாங்கள் இருவரும் சட்டப்படி திருமணம் செய்வதற்காக வயதை பூர்த்தி செய்துவிட்டோம். எங்கள் திருமணத்தையும் பதிவு செய்துவிட்டோம்" எனக் கூறினார்.
இதையும் படிங்க: ஜோத்பூரில் அவசரமாக தரையிறக்கப்பட்ட இண்டிகோ விமானம்