பெங்களூரு: ரேபிடோவில் தனது தோழியின் வீட்டிற்குச் சென்ற இளம்பெண் ஒருவரிடம் ரேபிடோ டிரைவர் சில்மிஷத்தில் ஈடுபட்டதால், அப்பெண் வேகமாக ஓடிய ரேபிடோ பைக்கில் இருந்து தப்பிக்க வேறு வழியில்லாமல் கீழே குதித்த சம்பவம் நடந்துள்ளது. இதனால், அப்பெண் உடலில் காயங்கள் ஏற்பட்டது. ரேபிடோவில் தான் சொன்ன வழியில் செல்லாததோடு, தன்னிடம் தவறாக சீண்டலில் ஈடுபட்ட ரேபிடோ டிரைவர் மீது பாதிக்கப்பட்ட அப்பெண் புகார் அளித்தார்.
இந்த நிலையில், அந்த பெண் அளித்த புகாரின் அடிப்படையிலும், அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையிலும் அந்த ரேபிடோ டிரைவரை யலஹங்கா நகர போலீசார் கைது செய்துள்ளனர்.
பெங்களூருவில் நேற்றிரவு (ஏப்.25) 11 மணியளவில் இளம்பெண் ஒருவர் மொபைலில் ரேபிடோவில் தனது தோழியின் வீட்டிற்கு செல்வதற்காக புக் செய்துள்ளார். இதனைத்தொடர்ந்து, அங்கு வந்த பைக்கில் அப்பெண் ஏறியவுடன் அப்பெண் கூறிய பாதையில் செல்லாமல், தொட்டபள்ளாப்பூர் சாலை நோக்கி செல்லும் மாற்றுப்பாதையில் வேகமாக சென்றபடி, அப்பெண்ணிடம் தவறாக நடந்துள்ளார்.
இதனால், செய்வதறியாமல் தவித்த அப்பெண் நாகேனஹள்ளி அருகே உள்ள தனியார் கல்லூரி முன் பைக்கில் இருந்து சாலையில் ஓடிக்கொண்டு இருந்த பைக்கில் இருந்து திடீரென குதித்துள்ளார். இதனையடுத்து அவரை, ரேபிடோவில் ஏற்றிக்கொண்டு வந்து தவறாக நடந்துகொண்ட அந்த இளைஞர் அங்கிருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பியோடினார்.
இதனையடுத்து சாலையில் விழுந்த அப்பெண்ணின் கை மற்றும் கால்களில் லேசான காயங்கள் ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக, நடந்தவை குறித்து அப்பெண் அப்பகுதியில் உள்ள காவல்துறையில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில், அந்த ரேபிடோ டிரைவரை கைது செய்த காவல்துறையினர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவலில் வைத்துள்ளனர்.
இந்நிலையில், போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் அவர் ஆந்திராவைச் சேர்ந்த தீபக் எனவும், திண்டுலுவில் வாடகை வீட்டில் வசித்து வருவதும் குடிபோதையில் இவ்வாறு சில்மிஷத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: வழிப்பறியில் இறங்கிய பாடி பில்டர் - கர்நாடகாவில் பிடிபட்டது எப்படி?!