பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் குண்டுவெடிப்புக்கு சதித்திட்டம் தீட்டியதாக சந்தேகிக்கப்படும் 5 பயங்கரவாதிகளை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர். இதனை தொடர்ந்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ள அதிகாரிகள், இந்த வழக்கில் ஐந்தாவது குற்றவாளியாக சந்தேகிக்கப்படும் பயங்கரவாதி ஜாஹித் வீட்டில் இருந்து நான்கு கைக்குண்டுகளை பறிமுதல் செய்துள்ளனர்.
குண்டுவெடிப்புக்கு திட்டமிட்ட குற்றச்சாட்டின் பேரில் நேற்று முன்தினம் சுஹைல், ஜாஹித், முதாசிர், பைசர் மற்றும் உமர் உள்ளிட்ட ஐந்து பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இதனை தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 7 நாட்டு கைத்துப்பாக்கிகள், 42 துப்பாக்கி தோட்டாக்கள், 4 வாக்கி டாக்கிகள், 2 டிராக்கர்கள் மற்றும் 12 மொபைல் ஃபோன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதனை தொடர்ந்து பெங்களூரு கொடிகேஹள்ளியில் உள்ள ஐந்தாவது குற்றவாளியாக சந்தேகிக்கப்படும் ஜாஹித் என்பவரது வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் சோதனை மேற்கொண்டுள்ளனர். இந்த சோதனையில் அவரது வீட்டில் இருந்து 4 நாட்டு வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டதாக மத்திய குற்றப்பிரிவு துணை போலீஸ் கமிஷனர் சரணப்பா தெரிவித்துள்ளார்.
இது குறித்து தகவல் அளித்துள்ள துணை போலீஸ் கமிஷனர் சரணப்பா, இந்த குண்டுவெடிப்பு சதி திட்டம் வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் ஜுனைத் கான் என்பவரின் அறிவுறுத்தல் படி நடைபெற்றுள்ளதாகவும், அவர் அங்கிருந்து பார்சல் மூலம் நான்கு கைக்குண்டுகளை ஜாஹித்துக்கு அனுப்பியுள்ளார் எனவும் தெரிவித்துள்ளார். இதை ஜாஹித் தனது வீட்டின் பீரோவில் பத்திரமாக வைத்து பூட்டி இருந்த நிலையில் அதை தற்போது பறிமுதல் செய்துள்ளதாக சரணப்பா தகவல் அளித்துள்ளார்.
மேலும், அந்த பார்சலில் இருந்தது கையெறி குண்டுகள் என்பது ஜாஹித்துக்கு தெரிந்திருக்கவில்லை எனவும் ஆனால் வெடிகுண்டுகளை கையாளுவதற்கான கருவிகள் மற்றும் உபகரணங்கள் இருப்பது அவருக்குத் தெரிந்துள்ளது எனவும் துணை போலீஸ் கமிஷனர் சரணப்பா தெரிவித்துள்ளார். மேலும் "அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின்போது இந்த தகவல் கிடைக்கப்பெற்ற நிலையில் அதனை தொடர்ந்து அவரின் வீட்டை சோதனை இட்டு இந்த குண்டுகளை கைப்பற்றியதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
மேலும் கைது செய்யப்பட்ட 5 பேரும் ஏழு நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்த துணை போலீஸ் கமிஷனர் சரணப்பா, இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை அரங்கேற்ற அவர்கள் எத்தனை நாட்களாக திட்டமிட்டார்கள், இந்த சம்பவத்தை எந்த இடத்தில் நிறைவேற்ற முடிவு செய்திருந்தார்கள் உள்ளிட்ட சில தகவல்கள் குறித்து தற்போதைக்கு எந்த விளக்கமும் அளிக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் கைது செய்யப்பட்டுள்ள ஐந்து நபர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு வரும் நிலையில், அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 12 மொபைல்கள் தடயவியல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டு உள்ளதாகவும் துணை போலீஸ் கமிஷனர் சரணப்பா தகவல் அளித்துள்ளார். மேலும், இவர்களிடம் நடத்தப்படும் விசாரணை முடிந்தவுடன் இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற நபர்களை நேரில் அழைத்து விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். அது மட்டுமின்றி, பெங்களூரு தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியான டி நசீரும் காவலில் எடுத்த விசாரிக்கப்படுவார் என மத்திய குற்றப்பிரிவு துணை போலீஸ் கமிஷ்னர் சரணப்பா விளக்கம் அளித்துள்ளார்.
இதையும் படிங்க: ராகுல் காந்தி மேல்முறையீட்டு வழக்கு: எதிர்மனுதாரர் 2 வாரத்தில் பதிலளிக்க உச்சநீதிமன்றம் ஆணை!