மைசூரு(கர்நாடகா): கர்நாடக மாநிலத்தின் மைசூர் மாவட்டத்தில் ஹல்லாரி கிராமத்தில் சிகை திருத்தும் பணி செய்து வருபவர் மல்லிகார்ஜூனா ஷெட்டி. இவர் பட்டியலினத்தைச் சேர்ந்த நபருக்கு சிகை திருத்தம் செய்ததால், ஹல்லாரி கிராமத்தினர் அவரை ஒதுக்கி வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதுமட்டுமில்லாமல், மல்லிகார்ஜூனா ஷெட்டிக்கு, அவ்வூர் பெரியவர்கள் சேர்ந்து, பட்டியலினத்தவருக்கு சிகை திருத்தம் செய்த பணிக்காக ரூ. 50,000 அபராதமும் விதித்துள்ளனர்.
மல்லிகார்ஜூனா அனைவருக்கும் சிகை திருத்தம் செய்யவேண்டும் என்கிற எண்ணத்தில், பட்டியலினத்தவரின் சிகைக்கும் திருத்தம் செய்துள்ளார். இதையறிந்த அந்த ஊர்ப்பெரியவரான சென்னநாயகா மற்றும் அவரது சகாக்கள், மல்லிகார்ஜூனா மீது பாகுபாடு காட்டும்விதமாக அவரது குடும்பத்தை ஊரிலிருந்து விலக்கி வைத்தும், அபாரதத்தொகை விதித்தும் கடும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதை தாங்க முடியாத மல்லிகார்ஜூனா, நஞ்சன்காடு வட்டாட்சியரிடம் புகாரளித்துள்ளார். இந்த சமூக ஒதுக்கல் முடிவை கைவிடாவிட்டால், தான் தற்கொலை செய்துகொள்வதைத் தவிர வேறு வழியில்லை என மல்லிகார்ஜூனா ஷெட்டி உருக்கமாகத் தெரிவித்தார்.
இதையடுத்து நஞ்சன்காடு வட்டாட்சியர் மகேஷ் குமார், இந்த தீண்டாமை நடவடிக்கைகளை மேற்கொண்டவர்களின் மேல் உரிய நடவடிக்கை எடுக்கும்படி காவல் துறையினருக்கு கடிதம் மூலம் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: தேர்தலை சீர்குலைக்க முயற்சித்த பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - காஷ்மீர் காவல் துறை