மும்பை: பாலிவுட்டில் பிரபல பாடகரும், பல்வேறு திரைப்படங்களுக்கு இசையமைப்பாளராகவும் பணியாற்றிய பப்பி லஹரி உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், பப்பி லஹரி இன்று (பிப். 16) காலை மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார். 69 வயதான இவர் பாலிவுட்டின் 'டிஸ்கோ கிங்' என அழைக்கப்படுகிறார். 80s, 90s காலகட்டங்களில் பாலிவுட்டில் டிஸ்கோ வகை இசையை பிரபலப்படுத்தியதில் இவர் முக்கியமானவர்.
தமிழிலும் பாடியவர்
'டிஸ்கோ டான்ஸர்', 'நமக் ஹலால்', 'டான்ஸ் டான்ஸ்', 'ஷராபி', 'ஹாகிப்', 'சல்தே சல்தே' ஆகிய இவரின் பாடல்கள் மிகவும் பிரபலமானவை.
1973ஆம் ஆண்டு பாலிவுட்டில் அறிமுகமான இவர், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் 200க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.
2011ஆம் ஆண்டு வித்யா பாலன் நடிப்பில் வெளிவந்து பலரின் கவனத்தைப் பெற்ற, 'தி டெர்ட்டி பிக்சர்' திரைப்படத்தில் மிகவும் ஹிட்டான பாடல் "ஊ லாலா லா..." என்ற பாடலை பாடியவர் இவர்தான். டைகர் ஷராஃப் நடிப்பில் 2020ஆம் ஆண்டு வெளிவந்த 'பாகி 3' திரைப்படம்தான் இவர் கடைசியாக பாடியப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.