டாக்கா: வங்கதேசம் மாநிலம், டாக்கா நகரின் சத்ரகண்டா பகுதியில் உள்ள குளத்தில் பேருந்து ஒன்று கவிழ்ந்து பெரும் விபத்து நிகழ்ந்து உள்ளது. இதில் 3 குழந்தைகள் உட்பட 17 பேர் இறந்து உள்ளனர். 35 பேர் காயமடைந்து உள்ளனர் எனத் தகவல் வெளியாகி உள்ளது.
பாஷர் ஸ்மிருதி பரிபாஹன் என்ற பேருந்து காலை 9 மணி அளவில் பிரோஜ்பூரின் பண்டாரியாவில் இருந்து புறப்பட்டு 10 மணி அளவில் பரிஷால் - குல்னா நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென சத்ரகாண்டா பகுதியில் உள்ள ஒரு சாலையோர குளத்தில் பேருந்து கவிழ்ந்தது. 52 பேர் மட்டும் பயணிக்கக்கூடிய இந்தப் பேருந்தில் 60 பயணிகள் பயணித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. நிகழ்ந்த விபத்திற்கு பேருந்து ஓட்டுநரின் கவனக்குறைவு தான் காரணம் என்று உயிர் பிழைத்தவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். மேலும் பேருந்தில் அதிகமான பயணிகளை ஏற்றிச் சென்றதால் விபத்து நிகழ்ந்திருக்கலாம் என்றும் அவர்கள் கூறினர்.
இந்தப் பேருந்தில் பயணித்த மோமின் என்பவர், தான் பண்டாரியாவில் இருந்து பேருந்தில் ஏறியதாகவும், பேருந்தில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்ததாகவும், அவர்களில் சிலர் பேருந்தின் இடையில் நின்று கொண்டிருந்தனர் என்றும் தெரிவித்தார். மேலும் பேசிய அவர், டிரைவர் கவனமில்லாமல் மேற்பார்வையாளரிடம் பேசிக்கொண்டிருந்தார் என்றும், இதனால் திடீரென்று பேருந்து சாலை அருகே உள்ள குளத்தினுள் விழுந்து விபத்துக்குள்ளானது என்றும் கூறினார்.
மேலும் பேருந்தில் அதிகமான பாரம் ஏற்றப்பட்டதால், சிறிது நேரத்திலேயே பேருந்து நீரில் மூழ்கியது என்றும் தெரிவித்தார். இதனால் பயணிகள் அனைவரும் பேருந்திற்குள் சிக்கிக்கொண்டனர் என்றும், தான் வெளியேற முயற்சித்து வெளியே வந்துவிட்டதாகவும் கூறினார். இந்தச் சம்பவம் குறித்து பேசிய பரிஷால் நகர ஆணையர் ஷவ்கத் அலி, இந்தப் பேருந்து விபத்தில் சம்பவ இடத்திலேயே 17 பேர் இறந்துவிட்டதாகவும், காயமடைந்த 35 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரிவித்து உள்ளார்.
இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பிரோஜ்பூரின் பண்டாரியா உபாசிலா மற்றும் ஜல்கதியின் ராஜாபூர் பகுதியில் வசிப்பவர்கள் என்று காவல்துறை தகவல் அளித்து உள்ளது. கடந்த புதன்கிழமை டாக்கா ட்ரிப்யூன் வெளியிட்ட அறிக்கையில் நாடு முழுவதும் 207 இருசக்கர வாகன விபத்துகள் பதிவாகி உள்ளது என்றும், இதில் 169 பேர் உயிரிழந்து உள்ளனர் என்றும் தெரிவித்து உள்ளது. மேலும் நாடு முழுவதும் நடந்த சாலை விபத்துகளில் 99 பாத சாரிகள் உயிரிழந்து உள்ளனர் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க: மணிப்பூர் செல்லவிடாமல் தடுத்து நிறுத்தியது அதிர்ச்சி அளிக்கிறது - டெல்லி மகளிர் ஆணைய தலைவர் ஸ்வாதி மாலிவால்!