பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள கல்யாண் நகரில் இருந்து ஹெச்.ஆர்.பி.ஆர் லேஅவுட் செல்லும் சாலையில் உள்ள நகவாரா என்ற இடத்தில் கட்டப்பட்டு வரும் மெட்ரோ ரயில் தூண் நேற்று (ஜன.10) காலை திடீரென சரிந்து பிரதான சாலையில் விழுந்து விபத்துக்குள்ளானது. அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் மீது தூண் விழுந்த நிலையில், தேஜஸ்வி மற்றும் அவரது இரண்டரை வயது மகன் உயிரிழந்தனர்.
அவர்களுக்கு 20 லட்ச ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என்று கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர், “கட்டுமானப் பணிகளின் போது மெட்ரோ ரயிலுக்காக போடப்பட்ட தூண் சரிந்து விழுந்து தாய் மற்றும் மகன் உயிரிழந்தது மீளாத துயரத்திற்குள்ளாக்கியது.
விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். வழக்குப் பதிந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 20 லட்சம் முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து இழப்பீடு வழங்கப்படும்” என தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வரும் போலீசார், தள பொறியாளர்கள், ஒப்பந்ததாரர்கள், பெங்களூரு மெட்ரோ ரயில் கார்பரேஷன் லிமிடட் அலுவலர்கள் மற்றும் தள பொறுப்பாளர்கள் உட்பட 5 பேர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: பொள்ளாச்சி பஞ்சு மில்லில் தீ விபத்து : ரூ.1 கோடி மதிப்பலான பொருட்கள் நாசம்