இந்தியாவில் கரோனாவின் தொற்று குறைந்திருக்கும் சூழலில் உத்தரப் பிரதேசம் மாநிலம் பாலியாவில் வைரஸ் காய்ச்சல் பரவிவருகிறது. இதுகுறித்து மருத்துவ கண்காணிப்பாளர் வி.பி. சிங் கூறுகையில்,
“டெங்கு காய்ச்சல் தொடர்பான அச்சம் மக்களிடையே ஏற்பட்டிருக்கிறது. குழந்தைகள் வார்டு முழுவதும் நிரம்பிவிட்டது. இது மழைக்காலம் என்பதால் காய்ச்சல், உடல் வலி, டயரியா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது” என்றார்.
குழந்தைகள் நல மருத்துவரான மருத்துவர் ஜே.எஸ். குமார், கடந்த 10 நாள்களில் நோயாளிகளின் எண்ணிக்கை 25 விழுக்காடு அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, ”வேகமாக பரவிவரும் வைரஸ் காய்ச்சலை உடனடியாக தடுக்க வேண்டும். அனைத்து கிராமங்கள் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் கொசுவை ஒழிப்பதற்கான மருந்தை அடிக்க வேண்டும். சுத்தத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்” என மாவட்ட நீதிபதி அதிதி சிங் அறிவுறுத்தினார்.
அதேசமயம் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருப்பதாக பாலியா மாவட்ட மருத்துவ அலுவலர் தன்மே காக்கர் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக உத்தரப் பிரதேசம் மாநில முதலமைச்சர் அலுவலகம் அளித்துள்ள விளக்கத்தில், “தினமும் 140 பேருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. பெரும்பாலான மக்களுக்கு டைஃபாய்டு காய்ச்சல் உறுதியாகியுள்ளது. டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சலால் யாரும் உயிரிழக்கவில்லை. மாவட்டத்தி இதுவரை 9 பேருக்கு டெங்கு உறுதியாகியுள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.